இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை: தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து, பூந்தமல்லி தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. மதுரையை சேர்ந்தவர் சரவணகுமார் (எ) அப்துல்லா (33), இவர் இஸ்லாமிய தேசம் ஒன்றை இந்தியாவில் தனியாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் பல்வேறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஆதரவு திரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் இவர் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி மதுரை போலீசாரால் கடந்த 2021ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
பின்னர் இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு சிறப்பு முகமை போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துகளை பதிவிட்ட சரவணக்குமார் (எ) அப்துல்லாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளவழகன் தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மோகன் ஆஜராகி வாதாடி உள்ளார்.

