Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்க துணைஅதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளரின் மனைவி இந்திய வம்சாவளி பெண் உஷா: டிரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மில்வாகீ: அமெரிக்க துணைஅதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் ஜே.டி. வான்சின் மனைவி இந்திய வம்சாவளி பெண் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் பைடனும், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டிரம்ப்பும் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. கடந்த 15ம் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது. குடியரசு கட்சியின் தேசிய மாநாடு விஸ்கான்சின் மாகாணம் மில்வாகீ நகரில் நடைபெற்றது. இதில் ஜேம்ஸ் டேவிட் வான்ஸ்(39) பெயரை அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் துணைஅதிபர் வேட்பாளராக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கடந்த 2022ல் அமெரிக்க செனட்டுக்கு தேர்வு செய்யப்பட்ட ஜே.டி.வான்ஸ் ஆரம்பத்தில் டிரம்ப்பின் பல்வேறு சட்டங்களை எதிர்பவராக இருந்த நிலையில் பின்னர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக மாறியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜே.டி.வான்ஸ் துணைஅதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியா, அமெரிக்கா உறவு வலுப்பெறும் என கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் குடியரசு கட்சியின் துணைஅதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜே.டி.வான்சின் மனைவி உஷா சிலுகுரி வான்ஸ் இந்திய வம்சாவழி பெண் என்பதே. ஆந்திராவில் பிறந்து அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்த தம்பதியின் மகளான உஷா சிலுகுரி கலிஃபோர்னியா மாகாணம் சான்டியாகோவில் வளர்ந்து வந்தார். யேல் சட்ட பள்ளியில் சட்டப்படிப்பில் இளநிலை பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் தத்துவவியல் துறையில் முதுகலை பட்டமும் பயின்ற உஷா சிலுகுரி அமெரிக்க உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றி உள்ளார்.

பேல் சட்டப் பள்ளியில் ஜே.டி.வான்சுடன் உஷா சிலுகுரிக்கு காதல் மலர, கடந்த 2014ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது அமெரிக்க துணைஅதிபர் வேட்பாளராக குடியரசு கட்சி வேட்பாளர் ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியா, அமெரிக்க இடையேயான உறவு வலுப்பெறும் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் சில பகுதிகளில் நிறபாகுபாடுகளுக்கு எதிராக குரவெழுப்பிய ஜே.டி.வான்சுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் உஷா சிலுகுரி வான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.