இந்தியா கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது பாஜவின் பிரித்தாளும் சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் 79வது பிறந்த நாளை, நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடினர். தமிழக காங்கிரஸ் சார்பில் பாரிமுனை காளிகாம்பாள் கோயிலில் நேற்று மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவ ராஜசேகரன் ஏற்பாட்டில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதை தொடர்ந்து சென்னை சாந்தோம் தேவாலயத்தில் தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.
இதையடுத்து, அண்ணா சாலை தர்காவில் சிறப்பு வழக்கறிஞர் பிரிவு தலைவர் சந்திரமோகன் ஏற்பாட்டில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஹஸ்ரத் சையத் முஸா ஷா காதிரியின் சமாதியில் செல்வப்பெருந்தகை மலர் போர்வை வைத்து சிறப்பு துவாவில் கலந்து கொண்டார். காங்கிரஸ் சர்க்கிள் தலைவர் கராத்தே செல்வம் ஏற்பாட்டில், பள்ளி குழந்தைகளுக்கு பென்சில்,பேனா உள்ளிட்ட உபகரணங்கள், ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதை தொடர்ந்து சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் செல்வப்பெருந்தகை தலைமையில் கேக் வெட்டி ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் மருத்துவ அணி சார்பில் ரத்ததானம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், பொருளாளர் ரூபி மனோகரன், அமைப்பு செயலாளர் ராம் மோகன், பொதுச் செயலாளர்கள் எம்.எஸ்.காமராஜ், பி.வி.தமிழ்செல்வன், மகிளா காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத், வழக்கறிஞர் அணி துணை தலைவர் எஸ்.கே.நவாஸ், எஸ்.சி.துறை தலைவர் ரஞ்சன் குமார், செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, ஆர்டிஐ பிரிவு துணை தலைவர் மயிலை தரணி மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், எம்.ஏ.முத்தழகன், டில்லி பாபு, கவுன்சிலர்கள் சுகன்யா செல்வம், தீர்த்தி, ஆர்.சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிகளை தொடர்ந்து செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: 2014-ல் வெற்றி பெற்றவுடன் ‘காங்கிரஸ் இல்லாத பாரதம்’ அமைப்போம் என்றார்கள். ஆனால், இன்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் கொடி பறக்கிறது. விசிகவும், காங்கிரசும் தவெகவுடன் இணைய வாய்ப்புள்ளதாக பாஜ எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசி இருக்கிறார். அது அவருடைய பகல் கனவு. இந்தியா கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது. பாஜவின் ‘பிரித்தாளும்’ கனவு தமிழகத்தில் பலிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.


