Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உலகளாவிய பாலின இடைவெளி குறியீடு 2025: இந்தியா 131-வது இடத்துக்கு சரிவு; 16வது ஆண்டாக ஐஸ்லாந்து முதலிடம்!!

ஜெனீவா : உலக பொருளாதார கூட்டமைப்பின், உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2025-ன் படி, 146 நாடுகளின் பட்டியலில் இந்தியா 131வது இடம் கிடைத்துள்ளது. உலகப் பொருளாதார கூட்டமைப்பு (World Economic Forum) 2025ம் ஆண்டுக்கான உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது உலகளவில் 146 நாடுகளின் பாலின சமத்துவத்தை விரிவாக விளக்கும் ஒரு வருடாந்திர ஆய்வறிக்கை ஆகும். இது கடந்த 19 வருடங்களாக, 2006ம் ஆண்டிலிருந்து தனது அறிக்கையை வெளியிட்டு வருகிறது. பாலின சுகாதாரம்(Health and Survival), கல்வி (Educational Attainment), பொருளாதாரம் (Economic Participation and Opportunity), அரசியல்(Political Empowerment) ஆகிய 4 காரணிகள் அடிப்படையில், ஆண் - பெண் இடையேயான வேறுபாடுகளை கணக்கிட்டு பாலின சமத்துவத்தை அளவிடுகிறது.

உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீட்டில் (Global Gender Gap Index) கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா இரண்டு இடங்கள் சரிந்து 131வது இடத்திற்கு சென்றுள்ளது என்பது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகும். இந்தியாவின் சமநிலை மதிப்பெண் 64.1 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசையில் தெற்காசியாவின் மிகக் குறைந்த தரவரிசை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த 2009ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 16 ஆண்டுகளாக, ஐஸ்லாந்து உலகின் பாலின சமத்துவமிக்க நாடுகளில் முதன்மையான நாடாக திகழ்கிறது. அதைத்தொடர்ந்து ஃபின்லாந்து (2nd), நார்வே (3rd), யுனைடெட் கிங்டம்(4th) நியூசிலாந்து (5th ) ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.தெற்காசியாவில் சிறந்த செயல்திறன் கொண்ட நாடாக வங்கதேசம் உருவெடுத்துள்ளது. உலகளவில் 75 இடங்கள் முன்னேறி 24வது இடத்தை வங்கதேசம் பிடித்துள்ளது. நேபாளம் 125-வது இடத்திலும், இலங்கை 130-வது இடத்திலும், பூட்டான் 119-வது இடத்திலும், மாலத்தீவுகள் 138-வது இடத்திலும், பாகிஸ்தான் 146-வது இடத்திலும் உள்ளன.