திருமலை: இந்தியாவில் இருந்து 2027ம் ஆண்டு முதன்முறையாக விண்வெளிக்கு மனிதரை அனுப்பி வைப்போம் என இஸ்ரோ தலைவர் நாராயணன் திருப்பதியில் இன்று கூறினார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) இருந்து நாளை மாலை 102வது ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் மற்றும் இயக்குனர்கள் இன்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த நாராயணன், நிருபர்களிடம் கூறியதாவது:நாளை மாலை இஸ்ரோ-நாசாவுடன் சேர்ந்து என்.ஐ.எஸ்.ஏ.ஆர். சிந்தடிக் அப்ரசர் ரேடார் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. ஜி.எஸ்.எல்.எப் 16 வரிசையில் 18வது ராக்கெட் இது. இந்த செயற்கைக்கோள் முழு பூமியையும் 12 நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வந்து துல்லியமான தரவுகள் மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை வழங்கும். இதற்காக அதில் எல்.பேண்ட், எஸ்.பேண்ட் ஆகிய சிந்தடிக் அப்ரேசர் ரேடார் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் எஸ்.பேண்ட் இந்திய தொழில்நுட்பம், எல்.பேண்ட் அமெரிக்க தொழில்நுட்பம் ஆகும். பூமியில் ஏற்படும் அனைத்து வகை மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள், நில நடுக்கங்களை இவை துல்லியமாகக் கண்டறியும். இஸ்ரோவில் 2 திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதில் முதலில் 400 கிமீ வரை பாதுகாப்பாக விண்வெளிக்கு சென்று திரும்பும் வகையில் இந்தியாவில் தயாரித்து இந்தியர்களை அனுப்பும் ககன்யான் திட்டம். இதற்காக ககன்யான் ஜி.1 ஆளில்லாமல் ரோபோ வைத்து டிசம்பரில் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டும் 2 முறை ரோபோ அனுப்பப்படும். அதன்பிறகு 2027ம் ஆண்டு முதல்முறையாக மனிதரை விண்வெளிக்கு அனுப்பி பாதுகாப்பாக அழைத்து வரும் திட்டம் செயல்படுத்தப்படும்.
2வது திட்டமாக சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு பிரதமர் அனுமதி கொடுத்துள்ளார். அந்த திட்டம் 2040ம் ஆண்டு செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இன்னும் 3 மாதத்தில் 6,500 கிலோ எடை கொண்ட அமெரிக்க தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் இந்திய ராக்கெட்டில் அனுப்பி வைக்கப்படும். விண்வெளி ஆராய்ச்சியில் தற்போது மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.அப்போது, ககன்யான் திட்ட இயக்குனர் உன்னிகிருஷ்ணன் நாயர் உள்ளிட்ட விஞ்ஞானிகள் உடனிருந்தனர்.