Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பர்மிங்காமில் இந்தியா வரலாற்று வெற்றி; சிராஜ், ஆகாஷ்தீப்பை பாராட்ட வார்த்தைகள் இல்லை: கேப்டன் சுப்மன் கில் பேட்டி

பர்மிங்காம்: இந்தியா-இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் 2வது டெஸ்ட் பர்மிங்காமில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 587, இங்கிலாந்து 407 ரன்கள் எடுத்தன. பின்னர் 180 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 427 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 608 ரன் இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 5வது நாளான நேற்று 68.1 ஓவரில் 271 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 336 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்று முதல் டெஸ்ட்டில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது. மேலும் 58 ஆண்டுகால வரலாற்றில் பர்மிங்காமில் இந்தியா முதல் வெற்றிபெற்றது. இந்திய பவுலிங்கில் ஆகாஷ் தீப் 6 விக்கெட் எடுத்தார். முதல் இன்னிங்சில் 269, 2வது இன்னிங்சில் 161 ரன் விளாசிய இந்திய கேப்டன் சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதுபெற்றார்.

பின்னர் அவர் கூறுகையில், ``முதல் போட்டியின் தோல்விக்குப் பிறகு நாங்கள், என்னவெல்லாம் பேசினோமோ அதையெல்லாம் சரியாக களத்தில் செயல்படுத்தியிருக்கிறோம். எங்கள் பந்துவீச்சும் பீல்டிங்கும் அற்புதமாக இருந்தது. இந்த மாதிரியான பிட்ச்சில் 400-500 ரன் எடுத்துவிட்டால் நம்மால் ஆட்டத்தில் நிலைத்திருக்க முடியும் என தெரியும். வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசிய விதம் ஆகச்சிறப்பாக இருந்தது. அவர்கள் இங்கிலாந்தின் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்திய விதம்தான் முக்கியமானதாக இருந்தது. ஆகாஷ் தீப் முழு முயற்சியோடு இதயப்பூர்வமாக சிரத்தையெடுத்து பந்து வீசியிருந்தார். இப்போது ரொம்பவே சவுகரியமாக உணர்கிறேன். எனது பேட்டிங் பங்களிப்பால் இந்தத் தொடரை வெல்லும் பட்சத்தில் மகிழ்ச்சியடைவேன். ஒவ்வொரு நாளிலும் எதோ ஒன்றை கற்றுக்கொண்டே இருக்கிறேன்.

பேட் செய்யும்போது கேப்டனாக அல்லாமல் ஒரு பேட்டராக மட்டுமே யோசிக்க விரும்புகிறேன். ஒரு கேப்டனாக யோசித்தால் ரிஸ்க் எடுக்க வேண்டிய சில இடங்களில் என்னால் ரிஸ்க் எடுக்க முடியாமல் போகும். பும்ரா அடுத்தப் போட்டியில் நிச்சயம் ஆடுவார். உலகளவில் பிரசித்திப் பெற்ற லார்ட்ஸில் ஆட வேண்டும் என்கிற கனவு எல்லோருக்கும் இருக்கும். அதிலும் அங்கு இந்திய அணியை வழிநடத்தி ஆடப்போவதை மிகப்பெரிய கவுரவமாக நினைக்கிறேன்’ என்றார். மேலும் சிராஜ், ஆகாஷ் தீப், எங்களுக்கு மிகவும் அற்புதமானவர்கள். இருவரும் 16-17 விக்கெட் வீழ்த்தினர். பும்ரா இல்லாமல் இது ஒரு பெரிய, பெரிய சாதனை. 20 விக்கெட்டுகளை நாம் எடுக்க முடியுமா என்று நிறைய கேள்விகள் இருந்தன. இந்த இருவரும் பந்து வீசிய விதம் மிகச்சிறந்தது. விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை என வெற்றிக்கு பின் நிருபர்களிடம் கில் தெரிவித்தார்.

இந்த வெற்றி உனக்கானது அக்கா! முதல் இன்னிங்சில் 4, 2வது இன்னிங்சில் 6 விக்கெட் எடுத்த ஆகாஷ் தீப் அளித்த பேட்டியில், ``நான் இதை எங்கேயுமே சொன்னதில்லை. எனது அக்கா கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கிறார். 2 மாதங்களுக்கு முன் தான் அதை கண்டறிந்தோம். அவளுக்கு இப்போது பரவாயில்லை. கடந்த 2 மாதங்களாக மனரீதியாக அவள் நிறைய துன்பங்களை அனுபவித்துவிட்டாள். இந்த வெற்றி உனக்கானதுதான் அக்கா. பந்தை கையில் எடுக்கும்போதெல்லாம் உன்னுடைய முகம்தான் எனக்கு ஞாபகம் வரும். உனக்கு மகிழ்ச்சியை மட்டுமே கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்த பெர்பார்மென்ஸை கூட உனக்காகத்தான் சமர்பிக்கிறேன். நாங்கள் எல்லோரும் உன்னுடன் இருக்கிறோம்’’ என்றார்.

இந்தியா ஒரு க்ளாஸான அணி

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், ``இது ஒரு கடினமான போட்டியாகவே இருந்தது. 2 இடங்களில் நாங்கள் இந்தப் போட்டியை தவறவிட்டு விட்டோம். முதல் இன்னிங்ஸில் இந்தியா பெரிய ஸ்கோரை எடுத்த பிறகு நாங்கள் முதல் இன்னிங்ஸில் 80-5 என்ற நிலையில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அயர்ச்சியடைந்து விட்டோம். இந்திய அணி ஒரு க்ளாஸான அணி. நிறைய க்ளாஸான வீரர்களை கொண்டிருக்கிறார்கள். கில் அசாத்தியமான பேட்டிங்கை ஆடியிருந்தார். இப்படியொரு அணிக்கு எதிராக பின் தங்கிய நிலையிலிருந்து மீண்டு வருவது ரொம்பவே கடினம். எங்களின் திட்டங்களையெல்லாம் மறு சீரமைத்துக் கொண்டு லார்ட்ஸ் போட்டிக்கு வர வேண்டும்.’ என்றார். இதனிடையே 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிட்ஸ்... பிட்ஸ்...

* பர்மிங்காமில் இதற்கு முன் 8 டெஸ்ட்டில் ஆடி 7 தோல்வி, ஒன்றில் டிரா செய்த இந்தியா நேற்று முதல் வெற்றியை பதிவு செய்தது.

* இங்கிலாந்தில் முதல் டெஸ்ட்டில் தோற்று 2வது டெஸ்ட்டில் வென்று தொடரை சமன் செய்வது இது முதன்முறையாகும்.

* இந்தியா நேற்று 336 ரன்னில் வென்றது வெளிநாட்டில் மிகப்பெரிய ரன் வித்தியாச வெற்றியாகும்.

* முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 3365 ரன் அடிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் இது தான். இதற்கு முன் 1924-25 ஆஷஸில் 3230 ரன் எடுக்கப்பட்டிருந்தது.

* முதல் 2 டெஸ்ட்டில் இந்தியா 1849 ரன் அடித்துள்ளது. இது ஒரு தொடரின் முதல் 2 டெஸ்ட்டில் எந்த அணியும் அடிக்காத அதிகபட்சமாகும்.