Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

434 ரன் வித்தியாசத்தில் இந்தியா இமாலய வெற்றி: இங்கிலாந்துடன் 3வது டெஸ்ட்

ராஜ்கோட்: இங்கிலாந்து அணியுடனான 3வது டெஸ்டில், இந்தியா 434 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்ததுடன், தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 445 ரன் குவித்த நிலையில் (கேப்டன் ரோகித் 131, ஜடேஜா 112, சர்பராஸ் 62), இங்கிலாந்து 319 ரன் குவித்து ஆல் அவுட்டானது (டக்கெட் 153, ஸ்டோக்ஸ் 41).

இதைத் தொடர்ந்து, 126 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்திருந்தது (ஜெய்ஸ்வால் 104 ரன் எடுத்து காயத்தால் ஓய்வு). கில் 65 ரன், குல்தீப் 3 ரன்னுடன் நேற்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 55 ரன் சேர்த்தது. கில் 91 ரன் (151 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். இதையடுத்து, ரிட்டயர்டு ஹர்ட் ஆகியிருந்த ஜெய்ஸ்வால் மீண்டும் களமிறங்கினார். இங்கிலாந்து பவுலர்களின் பொறுமையை சோதித்த ‘நைட் வாட்ச்மேன்’ குல்தீப் 91 பந்துகளை சமாளித்து 27 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சர்பராஸ் கான் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியில் இறங்கிய ஜெய்ஸ்வால் இரட்டை சதத்தை நோக்கி வேகமாக முன்னேறினார். இங்கிலாந்து அனுபவ வேகம் வீசிய 85வது ஓவரில் ஜெய்ஸ்வால் ஹாட்ரிக் சிக்சர் விளாசி மிரட்டினார்.

அறிமுக வீரர் சர்பராஸ் தன் பங்குக்கு தொடர்ச்சியாக 2வது அரை சதம் அடித்து முத்திரை பதித்தார். விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 209 ரன் அடித்திருந்த ஜெய்ஸ்வால், ராஜ்கோட்டிலும் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார். இந்தியா 2வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 430 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ஜெய்ஸ்வால் 214 ரன் (236 பந்து, 14 பவுண்டரி, 12 சிக்சர்), சர்பராஸ் கான் 68 ரன்னுடன் (72 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ரூட், வுட், ரெஹான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 557 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 39.4 ஓவரில் 122 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. கிராவ்லி 11, கேப்டன் ஸ்டோக்ஸ் 15, ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி தலா 16 ரன், மார்க் வுட் 33 ரன் (15 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 5, குல்தீப் 2, பும்ரா, அஷ்வின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்திய அணி 434 ரன் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்து வரலாற்று சாதனை படைத்தது. நெருக்கடியான கட்டத்தில் களமிறங்கி 112 ரன் விளாசியதுடன், முதல் இன்னிங்சில் 2 மற்றும் 2வது இன்னிங்சில் 5 என மொத்தம் 7 விக்கெட் கைப்பற்றிய உள்ளூர் நட்சத்திரம் ஜடேஜா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 2-1 என முன்னிலை வகிக்க, 4வது டெஸ்ட் ராஞ்சி ஜேஎஸ்சிஏ சர்வதேச ஸ்டேடியத்தில் பிப். 23ம் தேதி தொடங்குகிறது.