இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறுவதை மறுக்காமல் மோடி மவுனம் காப்பது ஏன்? மாநிலங்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் கார்கே சரமாரி கேள்வி
புதுடெல்லி: ‘இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்பை மத்தியஸ்தம் செய்ய அனுமதித்தது யார்? அவர் தான் போரை நிறுத்தியதாக 29 முறை கூறியும் பிரதமர் மோடி இதுவரை மறுப்பு தெரிவிக்காமல் மவுனம் காப்பது ஏன்?’ என மாநிலங்களவையில் நேற்று தொடங்கிய ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் மல்லிகார்ஜூன கார்கே சரமாரி கேள்வி எழுப்பினார். மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நேற்று தொடங்கியது. முன்னதாக காலையில் மாநிலங்களவை கூடியதும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் குறித்து விவாதம் நடத்துவதை அரசு உறுதி செய்யக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.கள் அமளியில் ஈடுபட்டதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை மீண்டும் கூடியதும், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர், ‘‘பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படையினருக்கு எனது பாராட்டுக்களை தெரிவிக்கிறேன். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானின் எந்த ஒரு பொதுமக்களின் உயிருக்கும் பாதிப்பு இல்லாமல் தீவிரவாத முகாம்களை நமது பாதுகாப்பு படை அழித்துள்ளது. பாகிஸ்தானால் இந்தியாவின் எந்த இலக்கையும் தகர்க்க முடியவில்லை. அவர்களின் டிரோன்கள், ஏவுகணைகள் அனைத்தும் வானிலேயே வீழ்த்தப்பட்டன. இதில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை. இந்தியா எப்போதும் மென்மையான தேசமல்ல, அது இப்போது வலுவான நாடு என்பதை தீவிரவாதிகளுக்கும் அவரது ஆதரவாளருக்கும் ஆபரேஷன் சிந்தூர் புரியவைத்துள்ளது’’ என்றார்.
பின்னர் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது: தீவிரவாத தாக்குதலை தடுப்பதில் பாஜ அரசு தோல்வி அடைந்துள்ளது. பாதுகாப்பில் கோட்டை விட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? உள்துறை அமைச்சரான அமித்ஷா பொறுப்பேற்க வேண்டும். ஆனால், அமித்ஷாவை காப்பாற்றுவதற்காக, காஷ்மீர் துணை நிலை ஆளுநர் பாதுகாப்பு குறைபாட்டிற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறார். மோடி அரசு அனைத்து விஷயத்திலும் ஆணவத்துடன் நடந்து கொள்கிறது. எதிர்க்கட்சிகளின் எந்த கடிதத்திற்கும் பதிலளிப்பதில்லை.
பஹல்காம் தாக்குதல் நடந்து 99 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அரசு கூறுகிறது. இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான மற்றவர்கள் இன்னமும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. அவர்களும் அழிக்கப்பட வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய அரசுக்கும், ஆயுத படைகளுக்கும் இந்தியா கூட்டணி கட்சிகள் முழு ஆதரவை தெரிவித்தன. ஆனால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் குண்டுவீச்சு தாக்குதலில் இருந்து இந்தியர்களை காப்பாற்ற இந்த அரசு தவறி விட்டது.
யாருடைய அழுத்தத்தின் பேரில் பாகிஸ்தானுக்கு எதிரான போரை இந்தியா திடீரென நிறுத்தியது? இந்த போர் நிறுத்த அறிவிப்பு கூட பிரதமர் மோடி மூலமாகவோ, பாதுகாப்பு அமைச்சர் மூலமாகவோ அறிவிக்கப்படவில்லை. வாஷிங்டனில் இருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்தியா, பாகிஸ்தான் இடையே போரை நிறுத்த டிரம்பை மத்தியஸ்தம் செய்ய அனுமதித்தது யார்? டிரம்ப் தானே போரை நிறுத்தியதாக இதுவரை 29 முறை சொல்லிவிட்டார். ஆனால் ஒருமுறை கூட பிரதமர் மோடி மறுப்பு தெரிவிக்காமல் தொடர்ந்து மவுனம் காப்பது ஏன்? மேலும், இப்போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் டிரம்ப் கூறுகிறார்.
இந்திய போர் விமானங்கள் எதுவும் வீழ்த்தப்படவில்லை என்றால் பிரதமர் மோடி அதை கூற வேண்டியதுதானே. நாடு அதை அறிய விரும்புகிறது. போர் நிறுத்தத்திற்கான நிபந்தனைகளை இந்த அரசு தேசத்திற்கு சொல்ல வேண்டும். அதில் அமெரிக்காவின் பங்கு இருக்கிறதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். ஆபரேஷன் சிந்தூரின் போது எந்த உலக நாடும் இந்தியாவின் பக்கம் நிற்கவில்லை. அமெரிக்கா கூட பாகிஸ்தானை கண்டிக்கவில்லை. எனவே நமது முறையான வெளியுறவுக் கொள்கையை நாம் வகுக்க வேண்டுமென அரசை வலியுறுத்துகிறேன். கார்கில் போருக்கு பிறகு விளக்க அறிக்கை வெளியிட்டதை போல, பஹல்காம் தாக்குதல் குறித்தும் அரசு விளக்க அறிக்கையை வெளியிட வேண்டும். மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசு மதிப்பளிக்க வேண்டும். தங்களை கடவுளாக நினைத்துக் கொள்ளக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார். இந்த விவாதம் இரவு வரை நீடித்தது.
* டிரம்ப் தலையீடு ராஜ்நாத் மவுனம்
டிரம்ப் குறித்து மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில் குறுக்கிட்டு பதிலளித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘போர் நிறுத்தத்தில் மூன்றாம் தரப்பின் எந்த தலையீடும் இல்லை. பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதால் மட்டுமே போரை தற்காலிகமாக நிறுத்த இந்தியா ஒப்புக் கொண்டது. இதில் யாருடைய அழுத்தமும் காரணமில்லை’’ என்றார். ஆனாலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் எதற்காக தொடர்ச்சியாக போரை அவரே நிறுத்தியதாக கூறுகிறார் என்பது குறித்து ராஜ்நாத் சிங் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.


