Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியா-பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு

வாஷிங்டன்: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரின் போது 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். மேலும், வர்த்தகத்தின் மூலம் இப்போரை முடிவுக்கு கொண்டு வந்ததாக மீண்டும் அவர் கூறியுள்ளார்.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த மே 10ம் தேதி மோதல் ஏற்பட்டது. 4 நாட்கள் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலம் போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்ததாக இந்தியா அறிவித்தது. இதில் அமெரிக்காவின் எந்த மத்தியஸ்தமும் இல்லை, பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதால் மட்டுமே ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாக இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், இதற்கு முரண்பாடாக, அமெரிக்க அதிபர் டிரம்ப், அவர் மத்தியஸ்தம் செய்து தான் போரை முடிவுக்கு கொண்டு வந்ததாக கூறி வருகிறார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் குடியரசு கட்சி செனட்டர்களுக்கு அளித்த இரவு விருந்தில் அதிபர் டிரம்ப் பேசுகையில், ‘‘இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போரில் 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்த சண்டை மோசமாகிக் கொண்டே போனது. இரு நாடுகளும் தீவிர அணுசக்தி நாடுகள் என்பதால் சண்டையை நிறுத்த மத்தியஸ்தம் செய்தேன். இந்த சண்டையை வர்த்தகத்தின் மூலம் தீர்த்து வைத்தோம். ஒருவேளை அணு ஆயுதங்களை வீசப் போகிறீர்கள் என்றால் நாங்கள் உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டோம் என்றேன். இதன் மூலம் போர் முடிவுக்கு வந்தது. கடந்த 8 ஆண்டுகளில் வேறு எந்த நிர்வாகமும் சாதிக்க முடியாததை விட அதிகமாக 6 மாதத்தில் எனது நிர்வாகம் சாதித்துள்ளது. நாங்கள் நிறைய போர்களை நிறுத்தி உள்ளோம். இதற்காக மிகவும் பெருமைப்படுகிறேன்’’ என்றார்.

4 நாள் போரின் போது இந்தியாவின் ரபேல் உட்பட 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறி வருகிறது. இந்த விவகாரத்தில் போர் விமான இழப்பை இந்திய விமானப்படை மறுக்கவில்லை என்றாலும், எத்தனை போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்பதை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. அப்படியிருக்கையில், பாகிஸ்தானை போல அமெரிக்க அதிபர் டிரம்பும் 5 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம், அந்த போர் விமானங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவை என்பது குறித்து டிரம்ப் எதுவும் குறிப்பிடவில்லை. போர் விமானங்கள் குறித்த டிரம்பின் பேச்சு இந்திய அரசியலில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

வர்த்தக ஒப்பந்தத்தின் 5ம் சுற்று பேச்சு நிறைவு

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாத உலக நாடுகளுக்கு எதிராக கூடுதல் வரி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அதிபர் டிரம்ப் கூறியிருக்கும் நிலையில், இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக அமெரிக்க குழுவுடன் இந்திய குழு கடந்த 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடத்திய 5ம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய குழு இந்தியாவுக்கு திரும்புகிறது.