நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் குளிக்க தடை மேட்டூர் அணையில் நீர்திறப்பு 50,000 கனஅடியாக அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
மேட்டூர்: மேட்டூர் அணையில் நீர்திறப்பு 50,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்து, கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 80 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து 25 ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால், ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை 6 மணிக்கு 6,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, மாலை 6 மணி நிலவரப்படி 43,000 கனஅடியாக அதிகரித்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், காவிரியில் பரிசல் சவாரிக்கும் தடை விதித்து, கலெக்டர் சதீஸ் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 6,223 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 12,657 கனஅடியாக அதிகரித்தது. இதையடுத்து, அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு, நேற்று மாலை 6 மணிக்கு 50,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர்மட்டம் 117.41 அடியாகவும், நீர் இருப்பு 89.40 டிஎம்சியாகவும் உள்ளது. 16 கண்மதகுகள் வழியாக மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர். நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்பதால் மேட்டூர் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சார்பில் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்ட கலெக்டர்களுக்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.