வருமானத்தில் பெரும் ஏற்றத்தாழ்வு நிலவும் நாடுகள் பட்டியலில் 40-வது இடத்தில் இந்தியா உள்ளது: ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்
டெல்லி: வருமானத்தில் பெரும் ஏற்றத்தாழ்வு நிலவும் நாடுகள் பட்டியலில் 40-வது இடத்தில் இந்தியா உள்ளது என ஜெய்ராம் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் வருமான ஏற்றத்தாழ்வு குறித்த அறிக்கையை மோடி அரசு திரித்துக் கூறியுள்ளதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. வறுமை நிலை மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு குறித்த உலக வங்கி அறிக்கையை மோடி அரசு திரித்ததாக புகார் தெரிவித்தனர். ஒன்றிய அரசின் பத்திரிகை தகவல் நிறுவனம் திட்டமிட்டு தவறான சித்திரத்தை அளித்துள்ளது. பொருளாதாரத் தரவுகளை திட்டமிட்டு சிதைத்து, ஒன்றிய அரசுக்கு சாதகமானதுபோல் மாற்றப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. மக்களின் நுகர்வில் உள்ள ஏற்றத்தாழ்வை மற்ற நாடுகளின் வருமான ஏற்றத் தாழ்வுடன் ஒப்பிட்டு மோசடி நடைபெற்றுள்ளது. மற்ற நாட்டு வருமான ஏற்றத்தாழ்வுடன் இந்தியர்களை ஒப்பிட்டால் இந்தியா 100 இடம் பின் செல்லும் என தெரிவித்தார்.


