Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக சினிமா பிரபலங்களின் ஆடிட்டர் வீடுகளில் ஈடி சோதனை: டிஜிட்டல் ஆவணங்களை கைப்பற்றி விசாரணை

சென்னை: சினிமா பிரபலங்கள் ஒவ்வொரு திரைப்படத்திற்கு பல கோடி ரூபாய் ஊதியமாக பெறுகின்றனர். அதேநேரம் அந்த ஊதியத்தை வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டுவதை தவிர்க்க ரொக்க பணம் மற்றும் அசையா சொத்துக்களாக வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்தது. மேலும், சினிமா பிரபலங்கள் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் பல கோடி ரூபாய்க்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் முதலீடு மற்றும் பினாமி பெயர்களில் பல கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள் இறக்குமதி செய்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்காக சினிமா பிரபலங்களின் கணக்கு வழக்குகளை பராமரிக்கும் நபர்களுக்கு பல கோடி வரை பணம் சட்டவிரோதமாக வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியது. அதனை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பிரபல சினிமா நட்சத்திரங்களுக்கு வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்யும் ஆடிட்டர்கள் வீடுகளில் நேற்று ஒரே நேரத்தில் தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, கோடம்பாக்கம் டைரக்கர் காலனி அண்ணா மெயின் சாலையை சேர்ந்த ஆடிட்டர் பொன்ராஜ் வசித்து வரும் வாடகை வீட்டில் 2 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர் பிரபல சினிமா பிரபலங்களுக்கு ஆடிட்டராக இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், திருவொற்றியூர் பகுதியில் வசித்து வரும் ஆடிட்டர் சேகர் என்பவர் வீடு, துரைப்பாக்கத்தில் உள்ள மற்றொரு ஆடிட்டர் வீடு, அலுவலகம் என மொத்தம் 5 இடங்களில் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையில் பிரபல சினிமா நட்சத்திரங்களின் ஆண்டு வரவு செலவு கணக்கு விபரங்கள், முதலீட்டு ஆவணங்கள், சினிமா தயாரிப்பாளர்களிடன் ஒவ்வொரு படத்திற்கு போடப்பட்ட ஒப்பந்த கணக்கு விபரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த சோதனை முடிந்த பிறகு தான் எத்தனை கோடி அளவுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது என்ற முழுமையான தகவல்கள் தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.