Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சட்டவிரோத குடியேறிகள் கைது விவகாரம் அமெரிக்கா முழுவதும் போராட்டம் பரவியது: வார இறுதியில் மேலும் தீவிரமடையும்; அதிபர் டிரம்புக்கு எதிர்ப்பு வலுக்கிறது

ஆஸ்டின்: சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்படுவதை எதிர்த்து லாஸ் ஏஞ்சல்சில் தொடங்கிய போராட்டம் அமெரிக்கா முழுவதும் பரவியுள்ளது. தலைநகர் வாஷிங்டன் உட்பட பல நகரங்களிலும் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்க (ஐசிஇ) துறையின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் 2வது முறையாக ஆட்சி அமைத்த பிறகு குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்க சட்டத்தை கடுமையாக்கினார். இதன்படி, உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசித்து வரும் வெளிநாட்டவர்கள் கண்டறியப்பட்டு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.

கடந்த 6ம் தேதி, குடியேற்றம் மற்றும் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்சில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், பல தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களில் ஆய்வு செய்த அவர்கள் உரிய ஆவணம் இல்லாத மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 118 வெளிநாட்டவர்களை கைது செய்தனர். தொழிலாளர் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்சில் போராட்டம் வெடித்தது. இப்போராட்டத்தை ஒடுக்க அதிபர் டிரம்ப் மாகாண ஆளுநர் உள்ளிட்டோரிடம் எந்த ஆலோசனையும் நடத்தாமல், தன்னிச்சையாக தேசிய காவல் படை மற்றும் கடற்படை வீரர்களை களமிறக்கினார்.

இவ்விரு படைகளை சேர்ந்த 4,000 வீரர்கள் லாஸ் ஏஞ்சல்சில் போராட்டத்தை ஒடுக்க குவிக்கப்பட்ட சம்பவம் அமெரிக்க மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து 5வது நாளாக லாஸ் ஏஞ்சல்சில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது இப்போராட்டம் அமெரிக்காவின் பல நகரங்களிலும் பரவி உள்ளது. நியூயார்க், சிகாகோ, அட்லாண்டா, ஒமாஹா, சியாட்டில், ஆஸ்டின் உள்ளிட்ட பல நகரங்களிலும் ஐசிஇ நீதிமன்றங்கள் மற்றும் ஐசிஓ அலுவலகங்கள் முன்பாக நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையில் போராட்டம் நடந்தாலும் சில இடங்களில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்களும் நடந்து வருகின்றன.

சான்பிரான்சிஸ்கோவில் நேற்று முன்தினம் குடியேற்ற நீதிமன்றத்திற்கு வெளியே 200 போராட்டக்காரர்கள் குவிந்தனர். அதில் பலர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2 நாட்கள் இங்கு நடந்த போராட்டத்தில் போலீஸ் வாகனங்கள், கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அரசு கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. 2 போலீசார் காயமடைந்துள்ளனர். நியூயார்க்கின் போலே சதுக்கத்தில் நடந்த போராட்டத்தில் ஏராளாமானோர் திரண்டனர். மன்ஹட்டனில் ஆர்ப்பாட்ட பேரணி நடந்தது.

அதில் பங்கேற்றவர்கள், குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்க அதிகாரிகள் நியூயார்க்கை விட்டு வெளியேற வேண்டும் என பதாகைகள் ஏந்தி கோஷமிட்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், ‘‘நாங்களும் புலம்பெயர்ந்த பெற்றோருக்கு பிறந்த குழந்தைகள். அமெரிக்க தேசம் புலம்பெயர்ந்தோருக்கான தேசம். பல்வேறு நாட்டிலிருந்து வந்தவர்கள் தான் இந்த நாட்டின் பிரஜைகளாக இருக்கிறார்கள். தொழிலாளர் வர்க்கத்தில் இருக்கும் புலம்பெயர்ந்தவர்கள் நாட்டின் முதுகெலும்பாக உள்ளனர். அவர்களை வெளியேற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’’ என்றனர்.

சிகாகோவில் நீதிமன்றம் முன்பாக நடந்த போராட்டத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு தெரிவித்து பதாகைகள் ஏந்தியிருந்தனர். யாரையும் நாடு கடத்தக் கூடாது என கோஷமிட்டனர். டென்வர், சான்டா அனா, டல்லஸ், போஸ்டன், வாஷிங்டன் ஆகிய நகரங்களில் அமைதியான முறையில் போராட்டம் நடந்தது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆஸ்டினில் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் பாட்டில், கற்கள் உள்ளிட்டவற்றை போலீசார் மீது வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 5 போலீசார் காயமடைந்தனர். 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இப்போராட்டம் வார இறுதி நாட்களில் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இப்போராட்டத்தால் அதிபர் டிரம்புக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ள போதிலும், ஐசிஇ சட்டத்தை தொடர்ந்து அமல்படுத்துவோம் என அமைச்சர் கிறிஸ்டி நோயம் தெரிவித்துள்ளார்.

* ராணுவத்தை களமிறக்குவேன்

அமெரிக்க ராணுவத்தின் 250ம் ஆண்டு விழாவில் ராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் பேசிய அதிபர் டிரம்ப், ‘‘லாஸ் ஏஞ்சல்சில் போராட்டம் நடத்துபவர்கள் அமெரிக்க கொடியை தீயிட்டு எரிக்கிறார்கள். வேறொரு நாட்டு கொடியை பெருமையுடன் ஏந்திச் செல்கிறார்கள். அமெரிக்க கொடியை எரிப்பவர்கள் நாட்டை நேசிப்பவர்கள் அல்ல. அவர்கள் மிருகங்கள். அப்படிப்பட்டவர்களை ஓராண்டு சிறையில் தள்ள நடவடிக்கை எடுப்போம். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் வெளிநாட்டு எதிரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வெறும் குப்பை குவியல்கள் தான் அங்கு உள்ளன. கலிபோர்னியா ஆளுநர், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் போன்றவர்கள் பொய்யர்களாக இருக்கிறார்கள்.

அமெரிக்காவின் ஒரு நகரத்தை வெளிநாட்டு எதிரிகள் கைப்பற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். வன்முறையை அடக்கவும், சட்டம் ஒழுங்கை மீட்கவும் அனைத்து நடவடிக்கையும் எடுப்போம். லாஸ் ஏஞ்சல்சை சுத்தமாகவும் சுதந்திரமாகவும் மாற்றுவோம். தேவைப்பட்டால் அவசரகாலங்களில் பயன்படுத்தும் அதிபரின் அதிகாரத்திற்கு உட்பட்ட கிளர்ச்சித் தடுப்பு சட்டத்தையும் அமல்படுத்துவோம். இந்த சட்டத்தின் மூலம் அமெரிக்காவிற்குள் உள்ள நகரத்தில் பாதுகாப்பு பணிக்கு ராணுவத்தை கொண்டு வர முடியும்’’ என எச்சரித்துள்ளார்.

* லாஸ் ஏஞ்சல்சில் ஊரடங்கு உத்தரவு

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 5வது நாளாக போராட்டம் நீடிக்கும் நிலையில், இப்போராட்டத்தை பயன்படுத்தி சிலர் இரவு நேரங்களில் வணிக வளாகங்ளில் பொருட்களை திருடிய சம்பவம் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்நகர மேயர் கரேன் பாஸ் செவ்வாய்கிழமை இரவு 8 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை தொடர்ந்து இரவில் பொதுஇடங்களில் பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.