புதுடெல்லி: லண்டனில் ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து ‘வேலியண்ட்’ என்ற தலைப்பில் ஒரு முழு ஆங்கில கிளாசிக்கல் சிம்பொனி இசையை இளையராஜா இசையமைத்து விட்டு நாடு திரும்பினார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். சிம்பொனி இசையமைத்த பிறகு நேற்று முதல்முறையாக மாநிலங்களவை கூட்டத்தில் இளையராஜா கலந்து கொண்டார். அவரை மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் பாராட்டினார்.
அவர் கூறுகையில்,’ சிம்பொனி இசையமைத்த முதல் இந்தியர் இளையராஜா என்று பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பாரம்பரியம் தொடர்ந்து உலகை கவர்ந்திழுக்கட்டும். 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சினிமாவில் இசையமைக்கும் ஒரு பழம்பெரும் இசையமைப்பாளர் இளையராஜா. அவர் ஒரு இசைஞானி, ஒரு இசை மேதை. அவர் இசையமைத்த பாடல்கள் இசை உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவை. இவை இதயத்தின் ஆழமாக உணரப்பட்ட உணர்வுகள். அவர் 8,600 பாடல்களுக்கு மேல் இயற்றியுள்ளார், மேலும் 1,523 திரைப்படங்களுக்கு இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் ஆவார். ஒன்பது மொழிகளுக்கும் மேல் அவர் இசைப்பணியாற்றி உள்ளார். 5 தேசிய திரைப்பட விருதுகளும் பெற்றுள்ளார்’ என்றார். அப்போது சமாஜ்வாடி கட்சி எம்பி ஜெயா பச்சன் கூறுகையில்,’இளையராஜாவுடன் நிறைய நேரம் செலவழிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது’ என்றார்.