Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஐஐடியில் உயர்கல்வி பயில தகுதி பெற்ற பழங்குடியின மாணவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஐஐடியில் உயர்கல்வி பயில தகுதி பெற்ற பழங்குடியின மாணவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழப்பாடி அருகே அரசு உண்டு உறைவிட பள்ளியில் படித்த பழங்குடியின மாணவி ஐஐடியில் சேர்ந்து படிக்க தேர்வாகி உள்ளார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள கருமந்துறை அரசு உண்டு உறைவிட பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த ஆண்டி- கவிதா ஆகியோரின் மகள் ராஜேஸ்வரி படித்து வந்தார். பழங்குடியின வகுப்பைச் சார்ந்த மாணவி ராஜேஸ்வரி, பிளஸ் 2 தேர்வில் 600க்கு 521 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார்.

தொடர்ந்து ஆசிரியர்கள் உதவி மற்றும் ஊக்கத்தால் ஐஐடி-யில் படிப்பதற்கான ஜேஇஇ தேர்வை எழுதினார். அத்தேர்வில் அகில இந்திய அளவில் பழங்குடியினர் பிரிவில் 417வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். இதன்மூலம் மாணவி ராஜேஸ்வரிக்கு ஐஐடியில் படிப்பதற்காக வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் சென்னையில் உள்ள ஐஐடியில் சேரலாம் என்ற நிலையும் உருவாகி உள்ளது.

தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் மலைபிரதேசங்களில் வசிக்கும் பழங்குடியின மாணவ, மாணவிகள், என்ஐடி, ஐஐடி போன்ற கல்வி நிலையங்களில் சேர்வதற்காக ஜேஇஇ மெயின் தேர்வு எழுதுவதற்காக 28 இடங்களில் பயிற்சி அளித்து வருகிறது. அதில் ஒன்றான கருமந்துறையில் உள்ள பழங்குடியினருக்கான உண்டு உறைவிட பள்ளியில் படித்து வந்த மாணவி ராஜேஸ்வரி, சிறந்த பயிற்சியை பெற்று தற்போது ஐஐடியில் பொறியியல் படிக்க தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

ஐஐடியில் சேர்ந்து படிக்க உள்ள மாணவி ராஜேஸ்வரி கூறுகையில், எனது தந்தை புற்றுநோயால் கடந்த ஆண்டு இறந்த நிலையிலும் கல்வியை தொடர்ந்திட தாய் மற்றும் அண்ணன் உதவி செய்தனர். இதன்மூலம் நான் நன்றாக படித்து ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். தற்போது எனக்கு ஐஐடியில் சேர்ந்து படிக்க இடம் கிடைத்திருக்கிறது என்றார்.

* ஐஐடியில் உயர்கல்வி பயில தகுதி பெற்ற மாணவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் IIT-க்கு உண்மையான பெருமையாக அமையும். அதற்காக நமது திராவிட மாடல் அரசு தொடர்ந்து உழைக்கும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.