சென்னை ஐ.ஐ.டி., வன வாணி பள்ளியில் உரிய அனுமதியின்றி மாணவர்களுக்கு தாங்கு திறன் சோதனை: பள்ளிக்கல்வித்துறை விசாரணை
சென்னை: சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள வன வாணி பள்ளி மாணவர்களுக்கு அனுமதியின்றி தாங்கு திறன் சோதனைநடத்தப்பட்டது குறித்து பள்ளி கல்வித்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி கல்வி அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் வன வாணி மெட்ரிக் பள்ளியில் பெற்றோர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அனுமதியின்றி சில மாணவர்களுக்கு தாங்குதிறன் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி ஸ்மார்ட் ஷூ, ஸ்மார்ட் வாட்சுகளை மாணவர்களுக்கு அணிவித்து தாங்குதிறன் சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. அப்போது மாணவர்களின் சக்தியை மீறி குதிக்க வைத்தும், ஓட வைத்தும் சோதனை செய்ததுடன் உணவு குடிநீர் வழங்க மறுத்ததாகவும் பெற்றோர் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
இது குறித்து புகார் அளித்தும் சென்னை ஐஐடி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர்கள் கூறிய நிலையில் பள்ளிக்கல்வித்துறை தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. வன வாணி பள்ளி முதல்வரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பள்ளி கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழு விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் பெற்றோர்கள் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் விதிகள் மீறப்படவில்லை என விளக்கமளித்த சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் மாணவர்களுக்கு மருத்துவ சோதனைகள் எதுவும் நடத்தப்படவில்லை என்றும் ஊக்க மருந்து ஏதும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.


