டெல்லி: பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உச்சநீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் ஒப்புதல் அளித்துள்ளார். கோயில்களில் இருந்து மாயமான, பழமையான சிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு அரசு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது சிலை கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபரை வழக்கில் இருந்து தப்பவைக்க உதவியதாக சிபிஐ அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், பொன் மாணிக்கவேலின் முன் ஜாமினை ரத்து செய்யக்கோரியும் சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக ஊடகங்களில் பொன் மாணிக்கவேல் பேட்டி அளிப்பதால் விசாரணை தடைபடுவதாகவும் சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், பொன் மாணிக்கவேல் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், சிபிஐ விசாரணை தொடர்பாக ஊடகங்கள், சமூக வலைதளங்களுக்கு பேட்டி அளிக்கவும் தடை விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உச்சநீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் ஒப்புதல் அளித்தார். பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டதால் புதுப்பித்தபின் ஒப்படைப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். மேலும், இந்த வழக்கு குறித்து ஊடகங்களிடம் பொன்.மாணிக்கவேல் பேசமாட்டார் என்றும் உச்சநீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது. பொன்.மாணிக்கவேல் குறித்து ஊடகங்களிடம் விசாரணை அதிகாரியும் பேசக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.