Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிக்கான முதல் நிலை தேர்வு; தமிழகத்தில் 50 ஆயிரம் பேர் எழுதினர்: இந்தியா முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்பு

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான (யுபிஎஸ்சி)முதல் நிலை தேர்வு இன்று காலை தொடங்கியது. இந்தியா முழுவதும் சுமார் 7 லட்சம் பேரும், தமிழகத்தில் 50 ஆயிரம் பேரும் இத்தேர்வை எழுதுகின்றனர். தேர்வு கூடங்களில் மாணவர்கள் கடும் சோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 21 வகையான பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது.

நடப்பு 2025ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 979 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 22ம் தேதி அறிவித்தது. தொடர்ந்து பிப்ரவரி 11ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு இந்தியா முழுவதும் இருந்து சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். இதில், சுமார் 7 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு மே 25ம் தேதி நடைபெறும் என்று யுபிஎஸ்சி அறிவித்திருந்தது.

அதன்படி சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வு இந்தியா முழுவதும் 79 நகரங்களில் இன்று காலை தொடங்கியது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய 5 நகரங்களில் நடந்தது. சென்னையில் எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அண்ணாநகர் ஜெயகோபால் கரோடியோ பள்ளி, புரசைவாக்கம், வில்லிவாக்கம் உள்பட 69 மையங்களில் யு.பி.எஸ்.சி. தேர்வு நடந்தது. சென்னையில் மட்டும் மாற்றுத்திறனாளிகள் உள்பட 24,364 பேர் தேர்வு எழுதினர்.

காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை பொது அறிவு தேர்வும், மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறனறிவு தேர்வும் நடந்தது. வினாக்கள் அனைத்தும் அப்ஜெக்டிவ் வடிவில் இருந்தது. தேர்வு எழுத காலை 7 மணி முதலே தேர்வு கூடங்களுக்கு தேர்வர்கள் வரத் தொடங்கினர். அவர்கள் கடும் சோதனைக்கு பிறகே தேர்வு கூடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அது மட்டுமல்லாமல் செல்போன், ஸ்மார்ட் வாட்ச், பேஜர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதன பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வு நடந்த மையங்கள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வுக்கூடங்களுக்கு தேர்வு எழுதுபவர்களை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இது குறித்து சங்கர் ஐ.ஏ.எஸ்.அகாடாமி நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது:யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் 15 நாட்களில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டமாக மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மெயின் தேர்வு மொத்தம் 5 நாட்கள் நடைபெறும். மெயின் தேர்வு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார். தேர்வு எழுதுபவர்கள் வசதிக்காக தேர்வு நடைபெறும் மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.