Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பெண்களுக்கு மட்டும் புற்றுநோயை ஏற்படுத்திய எச்பிவி; ஆண்கள் உடனான பாலியல் உறவாலும் பரவும் வைரஸ்: இருபாலருக்கும் வழக்கமான பரிசோதனைகள் அவசியம் என எச்சரிக்கை

புதுடெல்லி: பெண்களுக்கு மட்டும் புற்றுநோயை மட்டும் ஏற்படுத்திய ‘எச்பிவி’ வைரஸ் ஆண்கள் உடனான பாலியல் உறவால் தாக்கும் என்றும், இருபாலருக்கும் வழக்கமான பரிசோதனைகள் அவசியம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் நடத்திய ‘கான்கர் எச்பிவி அண்ட் கேன்சர் கான்கிளேவ் - 2025’ என்ற மாநாட்டில் எச்பிவி (மனித பாப்பிலோமா வைரஸ்) தொடர்பான பொது சுகாதார தாக்கங்கள் குறித்து மருத்துவ வல்லுநர்கள் கலந்துரையாடினர். அப்போது எச்பிவி நோய் தொற்று குறித்து அதிர்ச்சி தரும் தகவல்கள் பகிரப்பட்டன. எச்பிவி என்பது மனித பாப்பிலோமா வைரஸ் என்றும், இந்த வைரஸ் மனிதர்களைத் தாக்கும் பொதுவான வைரஸ் குழுவாகும். இந்நோய் தோல் மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் உள்ள சளி மென்சவ்வுகளை பாதிக்கிறது. 200க்கும் மேற்பட்ட வகைகளைக் கொண்ட டிஎன்ஏ வைரஸ் தொகுப்பாகும்.

இவற்றில் சில குறைவான ஆபத்து கொண்டவையாகவும், சில வைரஸ்கள் அதிக ஆபத்து வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. குறைவான ஆபத்து வகைகள் பிறப்புறுப்பில் மருக்கள் மற்றும் தோலில் மருக்களை ஏற்படுத்தலாம். அதிக ஆபத்தை தரும் வகைகளில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய், ஆண்குறி புற்றுநோய், ஆசனவாய் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய் போன்ற தீவிர நோய்களை உருவாக்க வாய்ப்புள்ளன. எச்பிவி ேநாயானது பாலியல் தொடர்பு மூலம் பரவுகிறது. தோல் - தோல் தொடர்பு மூலமும் பரவலாம். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே இந்த வைரஸால் பாதிக்கப்படலாம். மேலும் இந்நோய் அவர்களின் துணைகளுக்கும் பரவும் ஆபத்து உள்ளது. எச்பிவி தொற்று பெரும்பாலும் அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் இருக்கலாம், இதனால் பலருக்கு தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியாமல் இருக்கலாம். ஆரம்பகட்ட பரிசோதனைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் முக்கியம்.

பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க, வழக்கமான பாப் ஸ்மியர் மற்றும் எச்பிவி டிஎன்ஏ பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. குறைந்தது 15 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு இந்த தொற்று நோய் அதிகமாக ஏற்படுவதால், இளவயதில் தடுப்பூசி போடுவது மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. எச்பிவி தடுப்பூசிகள் (கார்டாசில், செர்வாரிக்ஸ்) ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் 9 முதல் 45 வயது வரை பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த தடுப்பூசிகள் முக்கியமாக எச்பிவி 16 மற்றும் 18 போன்ற அதிக ஆபத்து வகைகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கின்றன. இதனால் புற்றுநோய் மற்றும் பிற தொடர்புடைய நோய்களின் ஆபத்து குறைகிறது. இந்தியாவில் எச்பிவி தொற்று மற்றும் அதன் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு இன்னும் முழுமையாக பரவவில்லை.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா போன்ற நிறுவனங்கள், இந்நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இளவயதில் தடுப்பூசி போட்டுக்கொள்வது, பாலியல் ஆரோக்கியத்தை பராமரிப்பது மற்றும் வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மூலம் எச்பிவி தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிவது முக்கியம். குறிப்பாக, பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இந்தியாவில் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாக உள்ளதால், இந்த தடுப்பு நடவடிக்கைகள் உயிர்காக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை. எச்பிவி தொடர்பான நோய்களைத் தடுக்க, பொது சுகாதார கல்வி, தடுப்பூசி திட்டங்கள் மற்றும் ஆரம்பகட்ட பரிசோதனைகளை அரசு மற்றும் தனியார் அமைப்புகள் ஒருங்கிணைந்து மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் மேலும் கூறுகையில், ‘மனித பாப்பிலோமா வைரஸ் தொற்று ஆண்களுக்கு ஏற்பட்டால், அவர்களது பெண் துணைகளுக்கும் பரப்ப வாய்ப்புள்ளது. இருவருக்கும் இந்த வைரஸால் ஆபத்து உள்ளது. எச்பிவி வைரஸ் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டாலும், ஆண்களுக்கு ஆண்குறி புற்றுநோய், ஆசனவாய் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய் மற்றும் பிறப்புறுப்பு மருக்கள் போன்ற தீவிர நோய்களையும் இது ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு எச்பிவி தொடர்பான நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய வழக்கமான பரிசோதனைகள் இருப்பது போன்று ஆண்களும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

15 முதல் 25 வயதுக்கு இடையில் எச்பிவி தொற்று அதிகமாக ஏற்படுவதால், ஆரம்பகட்ட விழிப்புணர்வு மற்றும் சரியான நேரத்தில் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் அவசியம். இளவயதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தடுப்பூசி போடுவது, எச்பிவி வைரஸுக்கு ஆளாவதற்கு முன் அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும்’ என்று தெரிவித்தனர். எச்பிவி ேநாயானது பாலியல் தொடர்பு மூலம் பரவுகிறது. தோல் - தோல் தொடர்பு மூலமும் பரவலாம். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே இந்த வைரஸால் பாதிக்கப்படலாம். எச்பிவி தொற்று பெரும்பாலும் அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் இருக்கலாம், இதனால் பலருக்கு தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியாமல் இருக்கலாம். ஆரம்பகட்ட பரிசோதனைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் முக்கியம். பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க, வழக்கமான பாப் ஸ்மியர் மற்றும் எச்பிவி டிஎன்ஏ பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.