Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

எத்தனை முருக மாநாடுகள் நடத்தினாலும் பாஜவின் சுயரூபத்தை மக்கள் நன்கு அறிவார்கள்: செல்வப்பெருந்தகை தாக்கு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை:

2024 மக்களவை தேர்தலில் பா.ஜ செலவழித்த தொகை ரூபாய் 1494 கோடி. இது மொத்த கட்சிகளின் தேர்தல் செலவினங்களில் 44.56 சதவிகிதமாகும். வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவு எந்திரம் உள்ளிட்டவற்றில் பல்வேறு முறைகேடுகளை தேர்தல் ஆணையத்தின் ஆதரவோடு செய்வதால் தான் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ. வெற்றி பெற்று வருகிறது.

சமீபத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது, ‘நம்நாட்டில் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் வரும்” பேசியிருக்கிறார். இந்த பேச்சின் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி இந்தியாவின் ஆட்சி மொழிகளாக இந்தியும், ஆங்கிலமும் இருக்கும் என்பதற்கு மாறாக, அமித்ஷா பேசியிருக்கிறார். காங்கிரஸ் பிரதமர்கள் இந்தி பேசாத மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை தகர்க்கின்ற வகையில் அமித்ஷா பேசியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

ஆங்கிலத்தில் பேசத் தெரிந்தாலும் தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிற பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.தலைவர்கள் இந்தியில் பேசுவதை பிடிவாதமாக கையாண்டு வருகிறார்கள். மக்களுக்கு புரிகிற ஆங்கிலத்தில் பேச மறுக்கிறார்கள். அமித்ஷாவின் ஆணவப் பேச்சுக்கு தலைவர் ராகுல்காந்தி கடுமையான பதிலடி கொடுத்திருப்பதை வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன். ஆங்கிலத்தை பயில்வதன் மூலம் உலகத்துடன் போட்டி போடக்கூடிய ஒவ்வொரு குழந்தைக்கும் சமவாய்ப்பு அளிக்கக் கூடியது என கூறியிருப்பதன் மூலம் இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமையை முற்றிலும் ராகுல்காந்தி உணர்ந்திருப்பதையே இது காட்டுகிறது.

எனவே, ஜனநாயகத்திற்கு விரோதமான தேர்தல் நடைமுறை, மொழி கொள்கை, பொருளாதார கொள்கையை தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிற பாஜவை எத்தனை முருக பக்தர்கள் மாநாடுகள் நடத்தினாலும் அதனுடைய சுயரூபத்தை தமிழ் மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள், நிச்சயம் ஏமாற மாட்டார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.