Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு வீடு: மாவட்ட வாரியாக ஒதுக்கீடு, விரைவில் கட்டுமானத்துக்கு உத்தரவு வெளியீடு

நாட்டிலேயே முதன்முறையாக ஊரக பகுதிகளில் ஏழை குடும்பங்கள் வசிக்கும் குடிசைகளுக்கு பதிலாக நிரந்தர வீடுகள் கட்டித்தரும் முன்னோடி திட்டம் கலைஞர் 1975ம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, குடிசை இல்லா மாநிலமாக மாற்றிட கடந்த 2010ம் ஆண்டு கலைஞர் வீடு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, 2024-25ம் ஆண்டில் 1 லட்சம் பேருக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர பட்ஜெட்டில் ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் 2006- 2011ம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்தபோது கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தர குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டது. இதில் 22 லட்சத்து 4 ஆயிரம் குடிசை வீடுகள் கண்டறியப்பட்டன. இதில் 3.05 லட்சம் நபர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன.

இதையடுத்து, அதிமுக ஆட்சி காலத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் முடக்கப்பட்டது. தற்போது ஆட்சிக்கு வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தி வருகிறது.

குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க இன்னும் எவ்வளவு குடிசை வீடுகள் உள்ளன என்பதை கண்டறிய அனைத்து ஊராட்சிகளிலும் குடிசை வீடுகள் எண்ணிக்கை குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள், துணை பிடிஓ, ஊராட்சி செயலாளர்கள், சுகாதார ஊக்குனர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுக்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டது. 360 சதுர அடி பரப்பளவில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் கனவு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தரப்பட உள்ளன.

இந்நிலையில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு வீடு கட்டித்தரப்பட உள்ளது. மாவட்ட வாரியாக வீடுகள் ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு: கோயம்புத்தூர் 511, திண்டுக்கல் 3,588 கன்னியாகுமரி 1,435, கரூர் 718, சிவகங்கை 667, தென்காசி 346, நீலகிரி 234, தேனி 363, தூத்துக்குடி 1,664, திருநெல்வேலி 509, திருப்பூர் 1,313, விருதுநகர் 675,

பெரம்பலூர் 2,017, ராணிப்பேட்டை 3,073, நாமக்கல் 4,000, அரியலூர் 4,000, செங்கல்பட்டு 4,000, கடலூர் 3,500, தர்மபுரி 4,000, ஈரோடு 4,000, கள்ளக்குறிச்சி 3,500, காஞ்சிபுரம் 3,000, கிருஷ்ணகிரி 4,000, மதுரை 3,468, மயிலாடுதுறை 3,000, நாகப்பட்டினம் 3,000, புதுக்கோட்டை 3,000, ராமநாதபுரம் 2,419, சேலம் 4,000, தஞ்சாவூர் 3,000, திருச்சிராப்பள்ளி 4,000, திருப்பத்தூர் 4,000, திருவள்ளூர் 4,000, திருவண்ணாமலை 4,000, திருவாரூர் 3,000, வேலூர் 4,000, விழுப்புரம் 4,000.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்ததால் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. மார்ச் 16ம் தேதி முதல் அமலில் இருந்த தேர்தல் விதிகள் கடந்த 6ம் தேதியுடன் முடிவடைந்தன. தற்போது கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு செய்யும் பணிகள் முடிவடைய உள்ளது. விரைவில் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான உத்தரவுகள் வழங்கப்பட உள்ளன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.