கோயிலுக்கு சொந்தமான இடம் எனக் கூறி உக்கடத்தில் 13 வீடுகள் இடித்து அகற்றம்: அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்
கோவை: கோவை உக்கடம் நரசிம்மர் கோயில் அருகே வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது. இதன் அருகே 13 வீடுகள் உள்ளன. இதில் 9 வீட்டில் மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த குடியிருப்புகள் கோயிலுக்கு சொந்தமான இடம் என்பதால் வீடுகளை காலி செய்ய ஏற்கனவே நோட்டீஸ் கொடுத்து இருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் கோவை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். சென்னை உயர்நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்தனர்.
இந்த நிலையில் இன்று காலை போலீஸ் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் வீடுகளை இடிக்க முயன்றனர். அப்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இடிக்கக்கூடாது என்று கூறினர். ஆனால் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.
தொடர்ந்து அந்த வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. வீட்டை இடிப்பது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் 13 வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகாரிகள் இடித்து அகற்றினர். வீடுகள் அகற்றப்பட்ட சம்பவத்தால் உக்கடத்தில் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.


