ஹார்மோன் ஊசி போட்டு வங்கதேச சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 200 பேர்: 3 மாதங்களில் அரங்கேறிய கொடூரம்
புனே: பாலியல் தொழிலில் இருந்து மீட்கப்பட்ட வங்கதேச சிறுமி, தான் 3 மாதங்களில் 200க்கும் அதிகமானவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் வசாய் அருகே உள்ள நைகாவ் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பாலியல் தொழில் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 14 வயது சிறுமி உள்பட 5 பெண்கள் மீட்கப்பட்டனர் மற்றும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் மீட்கப்பட்ட 5 பேரில் சிறுமி உள்பட 3 பேர் வங்கதேசத்தை சேர்தவர்கள் என தெரிய வந்தது. அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், கடந்த 3 மாதங்களில் தன்னை 200க்கும் அதிகமான நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தை சேர்ந்த சிறுமி பள்ளி தேர்வில் தோல்வி அடைந்ததால் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். பின்னர் அவருக்கு அறிமுகமான பெண் ஒருவர் சிறுமியை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை பாலியல் தொழில் நடத்துபவர்களிடம் விற்றுள்ளார்.
இதனையடுத்து முதலில் சிறுமி குஜராத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளியுள்ளனர். அப்போது சிறுமி வயது முதிர்ச்சியடைந்தவராக காட்டுவதற்காக ஹார்மோன் ஊசிகளைச் செலுத்தியுள்ளனர். மேலும், மயக்க மருந்துகளைக் கொடுத்து, உடம்பில் சூடு வைத்தும் கொடுமைப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். பின்னர் சிறுமி கர்நாடகா, மகாராஷ்டிராவில் புனே, நவிமும்பை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கடந்த 3 மாதங்களில் சிறுமியை 200க்கும் மேற்பட்டோர் வன்கொடுமை செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது. போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.