Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நம்பிக்கை இழந்த நீட்

மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு நாடு முழுவதும் நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு மருத்துவகல்லூரிகளில் சீட் வழங்கப்படுகிறது. ஆனால் நீட் தேர்வு அறிமுகப்படுத்தியதில் இருந்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவ, மாணவிகள் அதிகம். நீட் தேர்வுக்காக பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் நல்ல சம்பாத்தியத்தை பார்த்து வருகின்றன. மேலும் தேர்வு மையத்தில் சோதனை என்ற பெயரில் கெடுபிடிகளால் மாணவிகள் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் இயற்பியல் பாடம் மட்டும் தான் கடினம் என்று மாணவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண்கள் என்று முறைகேடுகள் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்ததால் நீட் தேர்வின் மீதிருந்த நம்பிக்கையை மாணவர்கள் இழந்துவிட்டனர். ராஜஸ்தானில் ஒரே வரிசை எண்கள் கொண்ட ஒரே மையத்தை சேர்ந்த மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றதால் சர்ச்சை எழுந்தது. நீட் தேர்வில் முறைகேடு நடந்தது உண்மைதான் என்று ஒன்றிய அமைச்சரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நீட் தேர்வு விவகாரத்தில் 0.001 சதவீதம் அலட்சியம் நடந்தாலும் கண்டிப்பாக ஆராய வேண்டும். இது லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை நலன் இதில் அடங்கியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தது. நீட் தேர்வால் கிராமங்களில் படிக்கும் மாணவர்களின் டாக்டர் கனவு பலிக்காமல் போய்விடுகிறது. பிளஸ் 2 மதிப்பெண்களை வைத்து மருத்துவ கல்லூரியில் சீட் வழங்கும் முறையே சிறந்தது. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். தற்போது தமிழ்நாட்டின் நிலைப்பாட்டுக்கு அண்டை மாநிலங்களின் ஆதரவும் பெருகி வருகிறது.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை நியாயமானது. மாற்று யோசனையை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்விவகாரத்தில் தமிழ்நாட்டை கர்நாடக அரசும் பின்பற்றும். நம்பகத்தன்மையை இழந்துவிட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வு முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குரல் எழுப்பும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

பாஜ ஆளும் மாநிலங்களில் தான் நீட் முறைகேடு அரங்கேறியுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ள அவர், ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் நீட் வினாத்தாள் கசிவை தடுக்க கடுமையான சட்டம் இயற்றுவோம் என்று தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வு முகமை முறைகேடுகளுக்கு வாசல் திறந்துவிட்டால் சமூகத்துக்கு பெறும் அச்சுறுத்தலாக மாறிவிடும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. நம்பிக்கை தன்மையை நீட் தேர்வு இழந்துவிட்டது என்றே இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றே கருத தோன்றுகிறது. மருத்துவ கல்வி சேர்க்கை நடைமுறையில் ஆக்கபூர்வமான வேறு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் ஆகும்.