மெல்போர்ன்: இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி, 5 டி20 போட்டிகளில் ஆடி வருகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், மெல்போர்ன் நகரில் நேற்று, 2வது டி20 போட்டி நடந்தது. முதலில் ஆடிய இந்திய அணியின் துவக்க வீரர்களாக சுப்மன் கில், அபிஷேக் சர்மா களமிறங்கினர்.
கில் 5 ரன்னில், ஜோஷ் ஹேசல்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்தோர் சொதப்பலாக ஆடி ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அபிஷேக் சர்மா மட்டும் விதிவிலக்காக 37 பந்துகளில் 2 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 68 ரன் குவித்தார். ஹர்சித் ராணா 35 ரன்னில் அவுட்டானார். 18.4 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ட இந்திய அணி, 125 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸி தரப்பில் ஜோஷ் ஹேசல்வுட் அற்புதமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸேவியர் பார்ட்லெட் 2, நாதன் எல்லிஸ் 2, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 1 விக்கெட் சாய்த்தனர். அதையடுத்து, 126 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸி அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இருவரும் துவக்கம் முதல் அதிரடி காட்டி ரன்களை குவித்தனர். 4.3 ஓவரில் அணியின் ஸ்கோர் 51 ஆக இருந்தபோது, ஹெட் (28) அவுட்டானார்.
மார்ஷ் 26 பந்துகளில் 46 ரன் குவித்தார். அடுத்து வந்தவர்களும் அடித்து ஆடியதால், 13.2 ஓவரில் ஆஸி, 6 விக்கெட் இழந்து 126 ரன் எடுத்தது. அதனால், அந்த அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது. 3 விக்கெட் வீழ்த்திய ஹேசல்வுட் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த போட்டி நாளை ஹோபார்ட் நகரில் நடக்கிறது.
 
 
 
   