சென்னை: சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் தேசபக்தியை பற்றி பேசி, ‘‘நான் எதிர்கட்சியாக இருந்தாலும் தவறான கருத்துக்களை ஒருநாளும் கூற மாட்டேன். 1967ம் ஆண்டு சீனா-இந்தியா இடையே போர் மூண்ட போது, எம்ஜிஆர் ரூ.75 ஆயிரம் பணத்தை அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியிடம் ஒப்படைத்தார்.
ஜெயலலிதாவும் தான் அணிந்திருந்த நகைகள் மற்றும் தன்னிடம் இருந்த நகைகள் அனைத்தையும் வழங்கினார்’’ எனக் குறிப்பிட்டார். அவரது பேச்சுதான் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதுவும் தப்பும், தவறுமாக அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் கல்வி அமைச்சர் ஒரு நிகழ்ச்சியில் பேச வரும்போது சரியான தரவுகளை எடுத்துகொண்டு வர மாட்டாரா? என பலரும் குமுறி வருகின்றனர். இந்தியா-சீனா போர் நடைபெற்றது 1962ம் ஆண்டு.
ஜவஹர்லால் நேருதான் அன்றைய பிரதமர். செங்கோட்டையன் கூறியதுபோல சீனப்போர் 1967ம் ஆண்டு நடைபெற்றிருந்தால் அன்றைய பிரதமராக இருந்தது இந்திரா காந்தி தான். இதை எழுதி வைத்துக்கொண்டாவது பேசி இருக்கலாம் என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில், எம்ஜிஆர் பணம் கொடுத்தது உண்மைதான்.
அதை, அப்போதைய முதல்வர் காமராஜரிடம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து எம்ஜிஆர் கொடுத்து அனுப்பினார். ‘இந்தோ பாகிஸ்தான்’ போர் நிறுத்தத்தின் பின்னர் தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஒரு நாள் கழித்து 11 ஜனவரி 1966 அன்று லால் பகதூர் சாஸ்திரி இறந்தார். வெளிநாட்டில் (சோவியத் யூனியன்) இறந்த ஒரே இந்திய பிரதமர் இவர் ஆவார். செங்கோட்டையனின் இந்தப் பேச்சு சமூக வலை தளங்களில் இப்போது பேசுபொருளாக உள்ளது. பலரும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.