Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வரலாற்று வெற்றிக்கு பின் அணிவகுத்த சாதனைகள்

பர்மிங்காம்: இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் எட்ஜ்பாஸ்டன் அரங்கில் அந்நாட்டு அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா பெற்ற மகத்தான வெற்றிக்கு பின்னே பல்வேறு அரிய சாதனைகள் அணிவகுத்துள்ளன.

* கடந்த 58 ஆண்டுகளில், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில், 7 முறை தோல்விகளும், ஒரு முறை டிராவும் செய்துள்ள இந்தியா முதல் முறையாக வெற்றிக் கனியை தட்டிப் பறித்துள்ளது.

* இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்தியா 336 ரன் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றது. ரன்களை வைத்து பார்க்கையில் இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரும் வெற்றி இது. இதற்கு முன், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2019ல் 318 ரன் வித்தியாசத்தில் வென்றதே இந்தியாவின் சாதனையாக இருந்தது.

* வெளிநாட்டில் இந்தியா அடைந்த மாபெரும் ரன் வித்தியாச சாதனையும் இதுவே.

* இந்தியாவின் அற்புத பந்து வீச்சாளராக திகழ்ந்த ஆகாஷ் தீப், முதல் இன்னிங்சில் 4 விக்கெட், 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் என மொத்தம் 10 விக்கெட்டுகளை சாய்த்தார். அவர் தந்த ரன்கள் 187 மட்டுமே. இதற்கு முன், 1986ல் பர்மிங்காமில் இந்திய வீரர் சேத்தன் சர்மா 188 ரன் தந்து 10 விக்கெட் சாய்த்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

* எட்ஜ்பாஸ்டனில் டெஸ்ட் போட்டியில் வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய கேப்டனாக சுப்மன் கில் திகழ்கிறார். மன்சூர் அலிகான் பட்டோடி, அஜித் வடேகர், வெங்கட்ராகவன், கபில்தேவ், அசாருதீன், தோனி, கோஹ்லி, பும்ரா என இதற்கு முன் பல இந்திய கேப்டன்கள் படையெடுத்தபோதும், அவர்களால் வெல்ல முடியாத ஒன்றை, கில் சாதித்து காட்டியுள்ளார்.

* இங்கிலாந்தில் இரட்டைச் சதம் விளாசிய முதல் ஆசிய பேட்ஸ்மேன் கில் மட்டுமே.

* வெளிநாட்டு போட்டியில் வென்ற இளம் வயது கேப்டனாக கில் திகழ்கிறார். அவர், 25 ஆண்டு, 301 நாட்களில் இச்சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன், 1976ல் நியூசிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் சுனில் கவாஸ்கர் (26 ஆண்டு, 202 நாட்கள்) வென்றிருந்தார்.

* இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 89, 2வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 69 ரன் குவித்ததன் மூலம், 2000 ரன்களை கடந்தார். தவிர, 100 விக்கெட்டுகளையும் அவர் சாய்த்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2000 ரன், 100 விக்கெட் சாய்த்த முதல் வீரர் ஜடேஜா மட்டுமே.

* இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 1000 ரன்களை இந்தியா கடந்ததும் ஒரு சாதனையே. இதற்கு முன், 5 நாடுகள் மட்டுமே இந்த சாதனையை புரிந்துள்ளன.