Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மடத்தூர் சுற்றுவட்டார பகுதியில் பெருங்கற்கால கல் வட்டங்கள் குறித்து வரலாற்று நடுவம் ஆய்வு

உடுமலை : மடத்தூர் சுற்றுவட்டார பகுதியில் பதிற்றுப்பத்து பாடல்களில் குறிப்பிடப்படும் பகுதிக்கு அருகில் காணப்படும் பெருங்கற்கால கல் வட்டங்கள் குறித்து வரலாற்று நடுவத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். மடத்துக்குளம் சங்கராமநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மடத்தூர், மயிலாபுரம் பகுதிகள் உள்ளன. இங்கு 20 க்கும் மேற்பட்ட பெருங்கற்கால கல்வட்டங்கள் சிதிலமடைந்து கிடக்கின்றன. இதனை தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி மற்றும் வி.கே.சிவகுமார், அருட்செல்வன், பாலு ஆகியோர் ஆய்வு செய்தனர். இங்கு ஆதிச்ச நல்லூர், கொடுமணல் போன்று ஏராளமான இரும்பு எரிகற்களும், பெருங்கற்கால கல்வட்டங்கள் 10-க்கும் மேல் இருப்பதை நேரில் ஆய்வு செய்தனர்.

மேலும், சிதிலமடைந்த 10-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருப்பதையும் மேற்பரப்பு ஆய்வு செய்தனர். இந்த பகுதிக்கு அருகில் ஐவர் மலை என்னும் அயிரை மலை இருப்பதும், பதிற்றுப்பத்து பாடல்களில் இந்த இடங்கள் குறிப்பிட்டு எழுதியதையும் இங்கு நினைவு கூர்ந்து வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்கின்றனர். மேலும், குவார்ட்ஸ் எனும் வெள்ளைக்கற்கள் ஆங்காங்கே இருப்பதையும் ஆய்வு செய்தனர். மேலும், கொடுமணல், கொங்கல் நகரம் போன்று இவ்விடத்திலும் மேற்பரப்பு ஆய்வும் தொல்லியல் அகழ்வாய்வும் மேற்கொண்டால் ஏராளமான பொருட்கள் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி தெரிவித்தார்.

இந்த கற்திட்டைகள் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, இந்த மடத்தூர், மயிலாபுரம், அய்யம்பாளையம் என அனைத்து பகுதிகளிலும் இதுபோன்று மூடுகற்கள் ஏராளமாக இருந்ததையும், விவசாய நிலங்கள் உழும்போது தாழிகள், ஓடுகள் அதிகமாக கிடைத்ததையும் குறிப்பிட்டு பேசுகின்றனர். அவைஅனைத்தும் கேட்பாரற்று உடைந்து மண்ணுக்குள் புதைந்து போனதாகவும் கூறுகின்றனர்.

இந்த கல்வட்டங்கள் பெரும் பெரும் கற்களாக ஆங்காங்கே இருந்ததையும், சிறு சிறு இரும்புக்கற்களும், விவசாய நிலங்கள் விரிவுபடுத்தும்போது அவை அப்புறப்படுத்தப்பட்டதையும் குறிப்பிட்டு கூறுகின்றனர். ஆகவே, இருக்கும் கல்வட்டங்களையாவது காப்பாற்றவும், அடுத்த தலைமுறைக்கு நமது தொல்லியல் சின்னங்களை பாதுகாத்து வெளிக்கொணரவும் மத்திய மாநில தொல்லியல் துறைகள் கவனிக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் மனுக்களை கோரிக்கையாக அனுப்பவும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.