உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் மேல் நடவடிக்கையா? டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளருக்கு மீண்டும் நோட்டீஸ்
* அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் திடீர் சோதனை நடத்தினர். தொடர்ந்து, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீட்டிலும் சோதனை நடத்தினர். அங்கும் பல ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்தும், வீடு, அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரியும் இருவரும் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர், அமலாக்கத்துறை மனுதாரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து கடந்த ஜூன் 20-ம் தேதி உத்தரவிட்டனர். ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிடும்போது, மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று இந்த நீதிமன்றம் தடை விதித்த பின்னரும், ஆகாஸ் பாஸ்கரனுக்கு அமலாக்கத்துறை தீர்ப்பாய அதிகாரி கடந்த 11ம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது நீதிமன்ற அவமதிப்பாகும். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
அமலாக்கத்துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஸ் ஆஜராகி, ஜூன் 20ம் தேதி நீதிமன்றம் தடை விதித்தது. அதற்கு முன்பே, மனுதாரரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தீர்ப்பாயத்தில் அதிகாரிகள் ஒப்படைத்து விட்டனர். அந்த பொருட்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கலாமா? அல்லது மனுதாரரிடம் திருப்பிக் கொடுக்கலாமா? என்பது குறித்து தீர்ப்பாயம் முடிவு செய்யும். அதற்காக இந்த விளக்கம் கேட்டு நோட்டீசை அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்றார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அமலாக்கத்துறை ஒவ்வொரு முறையும் இதுபோல செயல்பட்டதால்தான் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தோம். நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் இதுபோல நோட்டீஸ் அனுப்பியதை ஏற்க முடியாது. இது கண்டனத்துக்குரியது. மனுதாரர் விரும்பினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம். அமலாக்கத்துறைக்கு எதிராக ஆகாஸ் பாஸ்கரன் தொடர்ந்த பிரதான வழக்கை வருகிற ஆகஸ்டு 6ம் தேதி விசாரணைக்கு எடுக்கிறோம். அதற்குள் அமலாக்கத்துறை பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.