சென்னை: பத்திரிகையாளர் என்ற போர்வையில் சிலர் மிரட்டல் விடுத்து ஆதாயம் தேடுகிறார்கள் என்று யூடியூபர் சங்கர் வழக்கில் ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. சவுக்கு மீடியா விவகாரங்களில் போலீஸ் தலையிட தடை கோரி யூடியூபர் சங்கர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு நேற்று வந்தது. அப்போது நீதிபதி, பத்திரிகையாளர்கள் அரசியல் சாசன பிரிவு 19ஐ தவறாக பயன்படுத்துகிறார்கள்.
பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள். அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள சுதந்திரத்தை மீறுகிறார்கள். விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அதற்கு இணையாக பத்திரிக்கையாளர் விசாரணையும் செய்து பொதுவெளியில் தெரிவிப்பது விசாரணை அமைப்பின் சட்ட நடவடிக்கைகளுக்கு பாதிப்பாக அமைகிறது. சிலர், பத்திரிகையாளர் என்ற போர்வையில் தனி நபர்களை தங்களது விசாரணை செய்தி என்பதின் வாயிலாக மிரட்டி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஆதாயம் தேடுகிறார்கள்.
பொதுவெளியில் ஒரு குற்ற நிகழ்வு சார்ந்து விசாரணை நடைபெறும் பட்சத்தில் ஊடகம் என்ற பெயரில் தகவல்களை வெளியில் சொல்வது, வெளிப்படுத்துவது விசாரணை அமைப்பிற்கு பங்கம் ஏற்படுத்தும். ஏதேனும் சட்ட விதிமுறை மீறல்கள் சரியான நடவடிக்கைகள் எடுக்காத நிலையில் உரிய தகவல்கள் கிடைக்கப் பெற்றால் சம்பந்தப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை அல்லது இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் வரை காத்திருக்க வேண்டும்.
உரிய நீதிமன்றத்திலோ அதற்கென்று விசாரணை செய்கின்ற அமைப்பிலோ புகார் தெரிவிக்க வேண்டும். ஆனால், வரைமுறைகளுக்கு முரணாக அதிகாரத்தை கையில் எடுப்பது நீதிமன்ற நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படுத்துவதாகும். இதுபோன்ற செயல்களை ஏற்க முடியாது. பத்திரிகையாளர் போர்வையில் இருப்பவர்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி, தனது விசாரணையை வரும் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.