Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் கிடப்பில் கிடக்கும் உயர் மட்ட மேம்பால பணி

*விரைந்து முடிக்க பயணிகள் எதிர்பார்ப்பு

நெல்லை : மேலப்பாளையத்தில் மூன்று பிளாட்பாரங்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட ரயில் நிலையத்தில் பிளாட்பாரங்களை கடக்க உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். நெல்லை மேலப்பாளையத்தில் சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள கருங்குளம், தருவை, முன்னீர்பள்ளம், கருப்பந்துறை, குலவணிகர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் தினமும் ரயிலில் பயணித்து வருகின்றனர்.

நெல்லை - நாகர்கோவில் வழித்தடத்தில் மேலப்பாளையம் ரயில் நிலையம் மூன்று பிளாட்பாரங்களுடன் கூடிய ரயில்நிலையமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் நெல்லை - நாகர்கோவில் பயணிகள் ரயில் காலை மற்றும் மாலையில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கிறது.

இதுபோல் அனந்தபுரி, குருவாயூர், திருச்சி இண்டர் சிட்டி, நாகர்கோவில், கோவை உள்ளிட்ட ரயில்களுக்கும் நிறுத்தம் வழங்க வேண்டும் என பயணிகள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த ரயில் நிலையத்தில் மூன்று பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பிளாட்பாரங்களை எளிதில் கடக்கும் வகையில் முதல் பிளாட்பாரத்தில் இருந்து மூன்றாம் பிளாட்பாரம் செல்லும் வகையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது.

இதற்காக காங்கிரீட்டுடன் கூடிய இரும்பு தூண்களும் அமைக்கப்பட்டன.மேலும் மேம்பாலம் பணிக்கு தேவையான இரும்பு கிரிடர்களும் கொண்டு வரப்பட்டு ரயில்நிலையத்தில் பாதுகாப்பற்ற நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இங்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவங்கி நடந்துவந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டது. தற்போது மேம்பாலம் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறாத நிலை தொடர்கிறது. இந்நிலையில் நெல்லை - நாகர்கோவில் பயணிகள் ரயில் மேலப்பாளையத்தில் நின்று செல்கிறது. முதல் பிளாட்பாரத்தில் ரயில் நின்று சென்றால் பயணிகள் சிரமம் இன்றி பயணிக்கின்றனர்.

அதே நேரத்தில் மூன்றாவது பிளாட்பாரத்தில் பயணிகள் ரயில் நிறுத்தப்படும் போது ரயில்வே தண்டவாளங்களை பயணிகள் கடந்து சென்று ரயில் ஏறிசெல்ல வேண்டியதால் குழந்தைகளுடன் வரும் பயணிகள், முதியவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.எனவே மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் பிளாட்பாரங்களை எளிதில் கடந்து பயணிகள் செல்லும் வகையில் உயர்மட்ட மேம்பால பணிகளை விரைவு படுத்தவேண்டும்.

பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முன்பதிவு செய்யும் வசதி, கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டும். மேலப்பாளையம் ரயில்நிலையத்தில் கிராசிங்கிற்காக பல ரயில்கள் மணிக்கணக்கில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு தேவையான குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். அதேநேரத்தில் பிளாட்பாரங்களில் மின்விளக்குகள் சீரான முறையில் எரியாத நிலை பல மாதங்களாக தொடர்கிறது.

இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதற்காக நெல்லை சந்திப்பு ரயில்நிலையத்துக்கு வந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டி முன்பதிவு செய்து பயணித்து வருகின்றனர். இதனால் கூடுதல் செலவாகிறது.

நெல்லை - நாகர்கோவில் ரயில்வே வழித்தடத்தில் மேலப்பாளையத்தில் மூன்று பிளாட்பாரங்களுடன் கூடிய விரிவாக்கம் செய்யப்பட்ட மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் கவுன்டர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.