1.17பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்தியாவிற்கு ஹெலிகாப்டர் உபகரணங்கள் விற்பனை: அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்
வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் 20ம் தேதி பதவியேற்கிறார். இதனிடையே தற்போதைய அதிபர் பைடன் நிர்வாகத்தில் முக்கிய பாதுகாப்பு உபகரணங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கான நான்கு ஆண்டுகால ஒப்பந்தம் முடிவடைய சில வாரங்களே உள்ளன. இந்நிலையில் இந்தியாவிற்கு மல்டி மிஷன் ஹெலிகாப்டர் உபகரணங்களை வழங்குவதற்கு அதிபர் பைடன் நிர்வாகம் ஒப்புதல்அளித்துள்ளது.
இதன்படி 1.17பில்லியன் டாலர் மதிப்பீட்டிலான இந்த உபகரணங்களில் 30 பல்திறன் தகவல் விநியோக அமைப்பு - வானொலி அமைப்புக்கள் உள்ளிட்டவற்றை இந்தியா கோரியுள்ளது. இந்த விற்பனை மூலமாக நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை தடுக்கும் இந்தியாவின் திறன் மேலும் வலுப்படும் என்று அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.


