Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இமாச்சலபிரதேசத்தில் மேகவெடிப்பால் கனமழை, வௌ்ளம்: 2 பேர் பலி

சிம்லா: தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் இமாச்சலபிரதேசத்தில் திடீர் மேக வெடிப்பு, கனமழை, வௌ்ளம், நிலச்சரிவு ஆகிய இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. மாநிலத்தில் உள்ள பல நதிகளில் அபாய அளவை தாண்டி வௌ்ள நீர் ஓடுவதால் பல பகுதிகள் நீரில் மூழ்கி கிடக்கின்றன. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் நிலைமை முற்றிலும் மோசமடைந்துள்ளது. ஓடைகளிலும் வௌ்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேக வெடிப்பு காரணமாக காங்க்ரா மாவட்டம் கானியாரா கிராமம் காட் மனுனி காட் என்ற பகுதியில் ஏற்பட்ட வௌ்ளத்தில் மூழ்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும் பியாஸ் காங்க்ரா ஆற்றில் கரை புரண்டு வௌ்ளம் ஓடுகிறது. இதனால் அங்கு இந்திரா பிரியதர்ஷினி நீர்மின்சார திட்டம் செயல்பட்டு வரும் இடத்தில் பணியில் இருந்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வௌ்ள நீரில் அடித்து செல்லப்பட்டனர்.

இதேபோல், குலு மாவட்டத்திலும் மேக வெடிப்பு, மழை காரணமாக ஏராளமான வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. சாலைகளில் வௌ்ளம் ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரெஹ்லா பிஹாலில் வீடுகளில் இருந்த பொருள்களை மீட்டு கொண்டிருந்த 3 பேர் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இந்துஸ்தான் திபெத் தேசிய நெடுஞ்சாலையில் ஜக்ரி என்ற இடத்தில் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மழை, வௌ்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. மணாலி, பஞ்சார் ஆகிய இடங்களிலும் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பஞ்சார் பகுதியில் பாலம் இடிந்து விழுந்ததால் மணாலி பஞ்சார் நெடுஞ்சாலையின் ஒருபகுதி அடித்து செல்லப்பட்டது. இதேபோல், நிலச்சரிவு காரணமாக காசா சம்து சாலை முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது.