மணலி, பால்பண்ணை பகுதிகளில் பள்ளி நேரத்தில் கனரக லாரிகள் செல்ல தடை விதிக்க வேண்டும்: பெற்றோர்கள் வேண்டுகோள்
மாதவரம்: சென்னை மணலி, மாத்தூர் எம்.எம்.டி.ஏ, கொசப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள், மாதவரம் தபால் பெட்டி, மூலக்கடை மற்றும் பால்பண்ணை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள் படிக்கின்றனர். மணலி காமராஜ் சாலை, மாதவரம் பால்பண்ணை சாலை வழியாக பெற்றோர்களுடனும் தனியாகவும் பைக்குகளிலும் மாணவர்கள் செல்கின்றனர். பள்ளி நேரங்களில் காமராஜர் சாலை, பால்பண்ணை சாலை வழியாக மணலி, மாதவரம் மண்டலத்தின் குப்பைகளை ஏற்றிவரும் கனரக லாரிகள் வருவதால் மாணவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.
இதுமட்டுமின்றி, கனரக வாகனங்கள் வேகமாக செல்வதால் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி அலுவலகம், பிற பணிகளுக்கு வாகனங்களில் செல்கின்றவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே பால்பண்ணை,மாத்தூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி நேரங்களில் மாநகராட்சி குப்பை லாரிகள் மட்டுமின்றி அனைத்து கனலாரிகளும் செல்ல தடை விதிக்க ஆவடி காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது; காமராஜர் சாலை, பால்பண்ணை சாலையில் மணலி, மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட குப்பை லாரிகள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குப்பை லாரிகளை சுத்தம் செய்யாததால் கடும் துர்நாற்றம் வீசுவதால் குழந்தைகளும் மாணவ, மாணவிகளுக்கும் குமட்டல் ஏற்படுகிறது. எனவே, பள்ளி நேரங்களில் குப்பை லாரிகள் செல்ல தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.