Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கேரளாவில் கனமழை நீடிப்பு: நெல்லை ரயில் விபத்தில் இருந்து தப்பியது

திருவனந்தபுரம்: கேரளா முழுவதும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கோழிக்கோடு, எர்ணாகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் வீசிய பலத்த காற்றில் தண்டவாளத்தில் மரங்கள், வீட்டுக் கூரைகள் விழுந்தன. திருநெல்வேலி-ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து தப்பியது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், ஏனைய 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்த இன்று கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், திருச்சூர், மலப்புரம், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று இரவு கோழிக்கோடு, எர்ணாகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் வீசிய பலத்த காற்றில் தண்டவாளங்களில் மரங்கள், வீட்டுக் கூரைகள் விழுந்ததால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பலத்த காற்றில் கோழிக்கோடு மாவட்டம் மாத்தோட்டம்-அரீக்கோடு இடையே தண்டவாளத்தில் ஏராளமான மரங்கள் மற்றும் வீட்டுக் கூரைகள் பறந்து விழுந்தன. அலுமினியம் ஷீட்டுகள் ரயில்வே மின்சார வயர்கள் மீது விழுந்ததில் தீப்பொறிகள் பறந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த சமயத்தில் அந்தப் பாதையில் திருநெல்வேலி-ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. ஆபத்தை உணர்ந்த அப்பகுதியினர் விரைந்து செயல்பட்டு அபாய சைரனை முழக்கினர். அதைத்தொடர்ந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ரயில் நிறுத்தப்பட்டது. இல்லாவிட்டால் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மரங்கள் மற்றும் கூரைகள் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டிருக்கும்.

இதனால் திருநெல்வேலி-ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து தப்பியது. இதுகுறித்து உடனடியாக ரயில்வே உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோழிக்கோட்டில் இருந்து ரயில்வே ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மரங்களையும், கூரைகளையும் அப்புறப்படுத்தினர். மேலும் சேதமடைந்த மின் வயர்களும் பழுதுபார்க்கப்பட்டன. இதனால் எர்ணாகுளம்-கோழிக்கோடு இடையே ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதை சீரமைக்கப்பட்ட பின்னர் சுமார் 6 மணிநேரத்திற்குப் பிறகு இந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கியது.

எர்ணாகுளம் அருகே ஆலுவாவிலும் நேற்று இரவு தண்டவாளத்தில் மரங்கள் விழுந்ததால் அங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சென்னை-மங்களூரு மெயில், சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ், நிசாமுதீன்-எர்ணாகுளம் மங்களா எக்ஸ்பிரஸ் உள்பட 10க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.