Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோல்டன் ஹவர்ஸில் மாரடைப்புக்கு சிகிச்சை இதயம் காப்போம் திட்டம் மூலம் 98.7 சதவீத நோயாளிகள் பயன்: சுகாதார துறை ஆய்வில் தகவல்

* மாரடைப்பு ஏற்பட்ட உடன் உடனடியாக வருவோருக்கு 14 மாத்திரைகள் தரப்படும்

* மாரடைப்பு தாக்கம் இருந்தால் இதய மருத்துவரிடம் ஆலோசனை

சென்னை: 1990களில் 60 அல்லது 70 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்படும், ஆனால் தற்போது 30 வயதிற்கு மேல் உள்ள இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. உலகளவில் ஆண்டுக்கு 17.9 மில்லியன் பேர் இருதய நோய் தொடர்பாக இறக்கின்றனர். அதில் குறைந்தது ஐந்தில் ஒரு பங்கை இந்தியா கொண்டுள்ளது என உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இதயத்தின் பிரதான பணி என்பது உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தைக் கொண்டு செல்வதுதான். அப்படி ரத்தத்தை உடலுக்கு கொண்டு செல்லும் வேலையை ரத்த குழாய்கள் செய்கின்றன.

இந்த ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அதனால் இதயத்தில் இருந்து உடலின் பிற பாகங்களுக்கு ரத்தத்துடன் செல்லும் ஆக்சிஜன் நிற்பதால் ஏற்படும் விளைவே மாரடைப்பு. இந்தியாவை பொறுத்தவரையிலும் கடந்த 2020ல் ஏற்பட்ட மாரடைப்பு மரணங்கள் 28,680. 2021ல் மாரடைப்பினால் ஏற்பட்ட மரணங்கள் 28,449. அதே 2022ம் ஆண்டு 32,457 ஆகவும் உயர்ந்துள்ளது. பத்தாண்டுகளில் 50 சதவீதம் மேல் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து உள்ளதாக தேசியக் குற்ற ஆவணக்காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணம் மனிதனின் உணவு மற்றும் வாழ்க்கை முறை இருந்தாலும் சரியான நேரத்தில் மாரடைப்புக்கு சிகிச்சை கிடைக்காதது பெரிய பிரச்சனையாக இருந்தது. இதற்கு தீர்வாக தமிழகத்தில் அரசு ‘இதயம் காப்போம் திட்டம்’ கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ரூ. 3.37 கோடியில் தொடங்கப்பட்டது. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் போது முதல் 60 நிமிடம் மிகவும் முக்கியமானது. எனவே தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நேரம் ஆகும் என்பதால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலில் மாரடைப்பு தடுக்கும் வகையில் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. அதற்கு பிறகு மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது இந்த திட்டம் மூலம் சிகிச்சை பெறும் 98.7 சதவீதம் நபர்கள் நலமுடன் உள்ளனர் என சுகாதாரத்துறை மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் இதயம் காப்போம் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது, எந்த வயது உடைய நபர்கள் பயனடைந்துள்ளனர் உள்ளிட்டவை குறித்து சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டது. அதன்படி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை இந்த திட்டம் மூலம் மொத்தம் 6090 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதும், அதில் 6011 நபர்கள் நலமுடன் உள்ளனர். மீதம் உள்ள 79 நபர்கள் இறந்துள்ளனர் என தெரிவந்துள்ளது. அதாவது சிகிச்சைக்கு வந்த 98.7 சதவீதம் நோயாளிகள் இந்த திட்டத்தால் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்த திட்டத்தின் கீழ் மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளது என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: இதயம் காப்போம் திட்டம் ஒருவரது உயிரை காக்கும் திட்டமாக திகழ்ந்து வருகிறது. ஒருவருக்கு மாரடைப்பு அல்லது மாரடைப்புக்கான அறிகுறி உடன் மருத்துவமனைக்கு வந்தால் அவருக்கு முதலில் (கோல்டன் ஹவர்ஸ்) உயிரை காப்பாற்ற சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக வருபவருக்கு 14 மாத்திரைகள் வழங்கப்படும். அதற்கு பிறகு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனை அல்லது மருத்துவ கல்லூரிக்கு அழைத்து செல்வர். இந்த மாரடைப்பு தாக்கம் அதிகமாக இருந்தால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கும் மருத்துவர்கள் தொலைபேசி மூலம் இதய நோய் மருத்துவர்கள் ஆலோசனை பெற்று சிகிச்சை அளிப்பார்கள். தமிழகத்தில் உள்ள 2,286 ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்த திட்டத்தின் கீழ் மாரடைப்பை தடுக்கும் மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கைத் தரம் இந்த திட்டத்தின் மூலம் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.

இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாரடைப்பு தடுப்பு மாத்திரை

ஆஸ்பிரின்150 எம்ஜி 2 மாத்திரை

க்ளோபிடோக்ரல்

75 எம்ஜி 4 மாத்திரை

அடோர்வாஸ்டாடின் 10 எம்ஜி 8 மாத்திரை

மொத்தம் 14 மாத்திரைகள் வழங்கப்படும்.

அதிகம் பயனடைந்த 5 மாவட்டங்கள்

மாவட்டம் சிகிச்சை

பெற்ற

நோயாளிகள்

எண்ணிக்கை

நாகப்பட்டினம் 458

சென்னை 359

ஈரோடு 285

விழுப்புரம் 287

கோவை 281

வயது அடிப்படையில்

சிகிச்சை அளித்த விவரம்

வயது சிகிச்சை

அளிக்கப்பட்ட நோயாளிகள்

எண்ணிக்கை

30 கீழ் 180

31 வயது முதல்

45 வயது வரை 1395

45 வயது முதல்

60 வயது வரை 2771

60 வயதுக்கு மேல் 1744