சென்னை: சென்னையில் நடந்த ஹெச்சிஎல் ஸ்குவாஷ் இந்தியன் டூர் 4 சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவில் தமிழக வீரர் வேலவன் செந்தில் குமார் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். சென்னையில் ஹெச்சிஎல் ஸ்குவாஷ் இந்தியன் டூர் 4 சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வந்தன. இதில் சிறப்பாக ஆடிய, தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் எகிப்து வீரர் ஆடம் ஹவால் உடன் அவர் மோதினார். பரபரப்பாக நடந்த இந்த போட்டியில், 11-7, 11-9, 9-11, 11-4 என்ற செட் கணக்கில் வேலவன் அட்டகாச வெற்றியை பதிவு செய்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில், இந்தியாவை சேர்ந்த, உலகளவில் இதற்கு முன் 10ம் இடம் பெற்றிருந்த ஜோஷ்னா சின்னப்பா- இந்திய இளம் வீராங்கனை அனாஹத் சிங் மோதினர்.
முதல் செட்டை 11-8 என்ற புள்ளிக் கணக்கில் அனாஹத் கைப்பற்றினார். அதற்கு பின் சுதாரித்து ஆடிய ஜோஷ்னா அடுத்த இரு செட்களை, 13-11, 13-11 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். 4வது செட்டை அனாஹத், 11-6 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்ற, வெற்றியை தீர்மானிக்கும் 5வது செட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த செட்டை 11-8 என்ற புள்ளிக் கணக்கில் வென்ற அனாஹத், 3-2 என்ற செட் கணக்கில் வெற்றிவாகை சூடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சென்னையில் அடுத்த வாரம், உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிகள் துவங்க உள்ளன. இப்போட்டிகளில் இந்தியா சார்பில் வேலவன் செந்தில் குமார், அபய் சிங், அனாஹத் சிங், ஜோஷ்னா சின்னப்பா கலந்து கொள்ள உள்ளனர்.


