கடலூர்: விஜயதசமியையொட்டி திருவந்திபுரம் ஹயக்ரீவர் கோயிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விஜயதசமியில் ஆரம்பிக்கும் அனைத்து காரியங்களும் வெற்றியுடன் கைகூடும் என்பது நம்பிக்கை ஆகும். இந்த விஜயதசமி திருநாளின் போது ஏராளமான குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதும் பெற்றோரின் வழக்கம். அன்றைய தினம் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ந்தால் குழந்தைகள் நன்றாக படிப்பார்கள் என்பது ஐதீகமாகும்.
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோயில் உள்ளது. நேற்று ஆயுத பூஜையையொட்டி இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இன்று விஜயதசமி விழாவை முன்னிட்டு காலை சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. காலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தேவநாதசாமி கோயிலுக்கு எதிரே அவுஷதகிரி மலைமீது உள்ள கல்விக்கு அதிபதியான லட்சுமி ஹயக்கிரீவர் கோயிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து ஹயக்கிரீவர் சன்னதியில் தரையில் நெல் மற்றும் அரிசியை கொட்டி அதில் பெற்றோர் தங்களது குழந்தைகளின் கை விரலை பிடித்து தமிழில் அ, ஆ என்ற எழுத்துகளை எழுத செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.