Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பதிலடி!

சென்னை: வேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடர்பாக 04.12.2025 அன்று அறிக்கை வெளியிட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பதிலடி குடுத்துள்ளார்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் 04.12.2025 தேதியிட்ட அறிக்கையில், வேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியின் மீதான மறுப்பறிக்கை பின்வருமாறு: தமிழ்நாட்டில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பண்டிகையின் போது வேட்டி சேலைகள் வழங்கும் பொங்கல் நோக்கத்துடனும், மாநிலத்திலுள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த கைத்தறி, பெடல்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கும் சீரிய நோக்கத்துடனும் ஒவ்வொரு ஆண்டும் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் ஏறத்தாழ 2,800 கைத்தறி நெசவாளர்கள். 11,300 பெடல் தறி நெசவாளர்கள் மற்றும் 66,000 விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

வேட்டி சேலை உற்பத்திக்குத் தேவையான நூல்கள் கூட்டுறவு நூற்பாலைகள், தேசிய கைத்தறி வளர்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2000-யினை பின்பற்றி தெரிவு செய்யப்படும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த நூல் இரகங்கள் அனைத்தும் அரசு நூல் கிடங்குகளில் பெறப்பட்டு, நூல் மாதிரிகள் எடுக்கப்பட்டு, அவை SITRA, Textile Committee மற்றும் NABL அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் தரப்பரிசோதனை செய்யப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட தரத்திலான நூல் இரகங்கள் மட்டுமே கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வேட்டி சேலைகள் உற்பத்திக்காக வழங்கப்படுகிறது.

தொடக்க கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் நூல் பெறப்பட்டவுடன் ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்வு செய்யப்படும் பசைபோடும் மற்றும் பாவு ஓட்டும் ஆலைகள் (Warping and Sizing) மூலமாக, பாவு நூல்களுக்கு பசை போட்டு, பாவு ஓட்டி சங்கத்தின் உறுப்பினர்களுக்கு உற்பத்திக்காக வழங்கப்படுகிறது. சங்க உறுப்பினர்களால் உற்பத்தி செய்யப்பட்டு, சங்கத்தில் வரவு வைக்கப்பட்ட வேட்டி சேலைகள் கோ-ஆப்டெக்ஸ், தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம் ஆகிய மூன்று முகமை நிறுவனங்களின் கொள்முதல் கிடங்குகளில் 100% தர ஆய்வு செய்யப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் கூடிய வேட்டி சேலைகள் மட்டுமே, மாவட்டங்களிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பொங்கல் 2025 திட்டத்திலும் இம்முறையினை வழுவாமல் பின்பற்றப்பட்டது. பொங்கல் 2025 திட்டத்திற்கு நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிலிருந்து கொள்முதல் முகமை நிறுவனங்களில் கொள்முதல் செய்யப்பட்ட வேட்டி பண்டல்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தரப்பரிசோதனையின்போது பாலிகாட் பாவு நூலில் நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளைவிட பாலியஸ்டர் சதவீதம் அதிகமாக உள்ளதென கண்டறியப்பட்ட சுமார் 13 இலட்சம் வேட்டிகள் கொண்ட பண்டல்கள். நிராகரிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட கொள்முதல் முகமை நிறுவனங்களிலேயே இருப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி நிராகரிக்கப்பட்டுள்ள 13 இலட்சம் வேட்டிகளுக்குப் பதிலாக சம்பந்தப்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து, இதுவரை நிர்ணயிக்கப்பட்ட தரஅளவீடுகளுடன் கூடிய சுமார் 9 இலட்சம் வேட்டிகள் திரும்ப பெறப்பட்டுள்ளது. எஞ்சிய 4 இலட்சம் வேட்டிகளும் திரும்ப பெறப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, "தரமே தாரக மந்திரமாக" கொண்டு, தரமான வேட்டி சேலைகள் மட்டுமே பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும் என்பதில் இந்த அரசு மிகவும் உறுதியாக உள்ளது என்பதற்கு இதுவே சான்றாகும். இந்த நிலைப்பாட்டில் தமிழ்நாடு அரசு எவ்வித சமரசமும் இல்லாமல், செயல்பட்டு வருகிறது. உண்மைநிலை இவ்வாறிருக்க, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், நடப்பு பொங்கல் 2026 திட்டத்தின்கீழ் 17 இலட்சம் வேட்டிகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக உண்மைக்கு புறம்பான தவறான தகவலை தெரிவித்துள்ளார். மேலும், இத்திட்டத்திற்கு தேவையான வேட்டி சேலை அனைத்தும், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மட்டுமே உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வரும் நிலையில், வேட்டி சேலைகள் வெளிமாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படுவதாக எவ்வித ஆதாரமற்ற, முற்றிலும் உண்மைக்கு புறம்பான தவறான தகவலை தெரிவித்துள்ளார்.

வேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடர்பாக, என்னால் பலமுறை விளக்கமான பதிலறிக்கை கொடுத்த பின்னரும், அதனை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல், சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி, அரைத்த மாவையே அரைத்து, புளித்த அரசியல் செய்து வருகிறார். கடந்த ஆட்சி காலத்தில், வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின்கீழ் வேட்டி சேலைகள் இதுவரை பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக, முழுமையாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதே இல்லை. பெரும்பாலும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் வேட்டி சேலைகள் வருவாய் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில், பொங்கல் 2012 திட்டத்திற்கு அக்டோபர் 2012 மாதத்திலும் (12.10.2012), பொங்கல் 2014 திட்டத்திற்கு ஆகஸ்ட் 2014 மாதத்திலும் (25.08.2014) மிகவும் காலதாமதமாக வருவாய் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதை எதிர்க்கட்சித் தலைவர் வசதியாக மறந்துவிட்டார் போல!

ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், பொங்கல் 2024 திட்டத்திற்கான வேட்டி சேலைகள் முழுவதும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, 31.12.2023 தேதிக்கு முன்னதாகவே அனைத்து தாலுக்கா அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத வகையில் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் பொது மக்களுக்கு விநியோகம் செய்து திட்டம் நிறைவு செய்யப்பட்டு, சாதனை செய்யப்பட்டது.

நடப்பாண்டு பொங்கல் 2026 திட்டத்திற்கான வேட்டி சேலைகள் அனைத்தும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, நாளது தேதிவரை 93% வேட்டி சேலைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 100% வேட்டி சேலைகளும் இத்திட்ட வரலாற்றிலேயே முதல் முறையாக 15.12.2025-க்குள் முழுமையாக அனுப்பி வைக்கப்பட்டு. பொங்கல் பண்டிகை முன்னதாக பொது மக்களுக்கு வழங்கி, திட்டம் நிறைவு செய்யப்படவுள்ளது. கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலைப் பாதுகாக்கவும், நெசவாளர்களின் நலனை மேம்படுத்தவும், தமிழ்நாடு அரசால் வேட்டி சேலை வழங்கும் திட்டம் மற்றும் இதர கீழ்க்கண்ட சீரிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த அரசு பொறுப்பேற்றவுடன், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, வேட்டி சேலையினை பொதுமக்கள் அனைவரும் விரும்பி உடுத்தும் வகையில், பொங்கல் 2023-ஆம் ஆண்டு முதல் சேலைகள் 15 புதிய வண்ணங்களிலும், வேட்டிகள் ½இன்ச் பார்டரினை ஒரு இன்ச் பார்டராக அதிகப்படுத்தி, 5 புதிய வண்ணங்களிலும் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இது பொது மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் பொங்கல் 2017 முதல் 2021 வரை 5 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த கொள்முதல் விலை நிர்ணய நிலுவைத் தொகை ரூ.148.71 கோடியினை சங்கங்களுக்கு விடுவித்து, அவற்றின் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளது.

வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் நெசவுக் கூலி,

பெடல்தறி சேலைகளுக்கு ரூ.69.79-லிருந்து, ரூ.75.95 ஆகவும், பெடல்தறி வேட்டிகளுக்கு ரூ.59.28-லிருந்து, ரூ.64.38 ஆகவும்,

விசைத்தறி சேலைகளுக்கு ரூ.43.01-லிருந்து, ரூ.46.75 ஆகவும், விசைத்தறி வேட்டிகளுக்கு ரூ.24-லிருந்து, ரூ.26.40 ஆகவும் கைத்தறி மற்றும் பெடல் தறிகளுக்கான Pre-Loom Wages

சேலைகளுக்கு ரூ.26.67-லிருந்து, ரூ.28 ஆகவும்,

வேட்டிகளுக்கு ரூ.12.36-லிருந்து, ரூ.13 ஆகவும்,

கைத்தறி மற்றும் பெடல்தறி சேலைகளுக்கான சாயக் கட்டணம்

ரூ.130-லிருந்து, ரூ.140 ஆகவும்,

22.05.2025 முதல் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளி சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ்,

பெடல்தறி Casement இரகத்திற்கு, நெசவு கூலி மீட்டர் ஒன்றுக்கு,

ரூ.7.84-லிருந்து, ரூ.8.40 ஆகவும்,

விசைத்தறி Drill இரகத்திற்கு, நெசவு கூலி மீட்டர் ஒன்றுக்கு.

ரூ.5.76-லிருந்து. ரூ.6.40 ஆகவும்,

விசைத்தறி Casement இரகத்திற்கு, நெசவு கூலி மீட்டர் ஒன்றுக்கு. ரூ.5.60-லிருந்து, ரூ.6.16 ஆகவும்,

13.05.2025 முதல் உயத்தி வழங்கப்பட்டு வருகிறது. மேற்கூறிய இரண்டு திட்டங்களுக்கும், கூலி உயர்வானது 2019-க்கு பின்னர், தற்போது கழக அரசினால் கூட்டுறவு சங்க நெசவாளர்களின் நலன் கருதி உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்க சாதனையாகும். கைத்தறி நெசவாளர்களுக்கு, அனைத்து இரகங்களுக்கும். ஆண்டுதோறும் நெசவு கூலியில், 10% அடிப்படை கூலி மற்றும் 10% அகவிலைப்படி உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது.

கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 200 யூனிட்டிலிருந்து 300 யூனிட்களாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 750 யூனிட்டிலிருந்து 1000 யூனிட்களாகவும் 03.03.2023 முதல் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு, வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மானியத் தொகை ரூ.2.10 லட்சத்திலிருந்து, ரூ.4.00 இலட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. 2025-26 ஆம் ஆண்டில், விசைத்தறிகளை நவீனப்படுத்தும் திட்டம் ரூ.50.00 கோடி மானியத்துடன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10 சிறிய அளவிலான கைத்தறிப் பூங்காக்கள் (Mini Handloom Parks), ஒரு பூங்காவிற்கு ரூ.5 கோடி மானியத்துடன் அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றது முதல், கடந்த 4 ஆண்டுகளில், "எல்லோருக்கும் எல்லாம்" என்கிற கொள்கையுடன். எந்த குறையும் சுட்டிக்காட்ட முடியாத வகையில், அனைத்து மக்களின் ஆதரவுகளையும் பெற்றுள்ளது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத, எடப்பாடி பழனிசாமி , அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, கழக அரசின் சாதனைகளை குறை சொல்லும் நோக்கத்தில் உண்மைக்கு புறம்பான, அடிப்படை ஆதாரமற்ற, முன்னுக்குப்பின் முரணான செய்திகளை, அறிக்கையாக வெளியிடுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். தவறான செய்திகளை செவி வழி கேட்டு. வாய்க்கு வந்தபடி அறிக்கைகளை வெளியிட்டு, தமிழ்நாட்டு மக்கள் நலன் மீது எவ்வித அக்கறையும் இல்லாமல், சுய இலாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, ஜால்ரா போடும். அடிமை பழனிசாமி. இனிமேலாவது மலிவான அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.