ஹஜ் பயணத்தை நிறைவு செய்து கடைசி விமான பயணிகள் 383 பேர் சென்னை திரும்பினர்: அமைச்சர் நாசர் வரவேற்றார்
சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹஜ் பயணிகள் இந்த ஆண்டு, மே 16ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை 14 சவுதி அரேபியன் தனி விமானங்கள் மூலம் ஹஜ் புனித பயணத்தை சென்றனர்.ஹஜ் புனித பயணத்தை நிறைவு செய்த அவர்கள், கடந்த ஜூன் 22ம் தேதி முதல் நேற்று வரை 14 சவுதி அரேபியன் தனி விமானங்கள் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர். நேற்று தாயகம் திரும்பிய, இந்த ஆண்டிற்கான ஹஜ் புனித பயணத்தின் கடைசி விமானத்தில் 383 பயணிகள் சென்னை திரும்பினர். இதில் ஆண்கள் 180, பெண்கள் 203. இவர்களை தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர் நாசர் சால்வை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் நாசர் கூறியதாவது: இந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த 5,757 பேர் ஹஜ் சென்றனர். தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான ஏற்பாடுகளை இந்த ஆண்டு செய்திருந்தது. இந்த முறை 150 பேருக்கு, ஒருவர் என 38 ஹஜ் ஆய்வாளர்கள், ஹஜ் பயணம் மேற்கொண்டனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, தற்போது சிறப்பான முறையில், தமிழ்நாடு அரசு ஹஜ் ஏற்பாடுகளை செய்துள்ளது.