கவுகாத்தி: கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மின்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சன்ஸ்கார் சரஸ்வத், சக இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
கவுகாத்தியில், கவுகாத்தி மாஸ்டர்ஸ் சூப்பர் 100 பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வந்தன. இதன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டி நேற்று நடந்தது. அதில், இந்திய வீரர்கள் சன்ஸ்கார் சரஸ்வத் - மிதுன் மஞ்சுநாத் மோதினர்.
முதல் செட்டில் அட்டகாச திறனை வெளிப்படுத்திய சன்ஸ்கார் 21-11 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். 2வது செட்டில் சுதாரித்து ஆக்ரோஷமாக ஆடிய மிதுன், 21-17 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். அதையடுத்து விறுவிறுப்பாக நடந்த 3வது செட்டில் ஆதிக்கம் செலுத்திய சன்ஸ்கார் 21-13 என்ற புள்ளிக் கணக்கில் அதனை வசப்படுத்தினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற சன்ஸ்கார் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இப்போட்டி 50 நிமிடங்கள் நடந்தது. சன்ஸ்கார், கடந்தாண்டு, பெங்ளூருவில் நடந்த சீனியர் தேசிய இரட்டையர் பிரிவு போட்டியில் அர்ஷ் முகம்மதுவுடன் சேர்ந்து, சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.


