அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பொது இடத்தில் பயணிகளை தாக்கி கலவரத்தில் ஈடுபட்ட 6 குற்றவாளிகளின் வீடுகளை அகமதாபாத் மாநகராட்சி நேற்று இடித்து தள்ளியது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வஸ்திரால் என்ற இடத்தில் கடந்த வியாழனன்று இரவு 20 பேர் கொண்ட கும்பல் கையில் ஹாக்கி மட்டைகள்,அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயதங்களை வைத்து கொண்டு ரோட்டில் நடந்து செல்வோர் மீது திடீரென தாக்கினர். இதுதொடர்பாக ஒரு சிறுவன் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 6 பேரின் வீடுகள் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள 6 வீடுகளை இடித்து தள்ளினர். இதையொட்டி அந்த பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட இளைஞர்களை போலீசார் சேர்ந்து தடியால் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. அது பற்றி துணை ஆணையர் பல்தேவ் தேசாயிடம் கேட்ட போது,‘‘அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது’’ என்றார்.