காந்திநகர்: குஜராத் பால் உற்பத்தியாளர்களின் குரலை ஆளும் பாஜக அரசு நசுக்குவதாக விவசாயிகள் குற்றம் சாட்டிய நிலையில், அவர்களுக்கு ராகுல் அதிரடி வாக்குறுதி அளித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பால் கூட்டுறவு சங்கம் (அமுல்), சர்தார் வல்லபாய் படேல் மற்றும் திரிபுவன்தாஸ் படேல் போன்ற தலைவர்களின் வழிகாட்டுதலால் உருவாக்கப்பட்டது. லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்களின் கூட்டு முயற்சியால் உருவானதாகும்.
இந்தக் கூட்டுறவு அமைப்பின் முக்கிய நோக்கமே, இடைத்தரகர்களின் சுரண்டலை ஒழித்து, பால் உற்பத்தியாளர்களுக்கே நேரடியாகப் பலன்கள் சென்றடைவதை உறுதி செய்வதாகும். இதன் மூலம், குஜராத்தின் கிராமப் பொருளாதாரம் பல ஆண்டுகளாக வலுப்பெற்று வந்துள்ளது. இந்தச் சூழலில், குஜராத் மாநிலம் ஆனந்திற்குப் பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பால் உற்பத்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, விவசாயிகள் தங்கள் வேதனைகளை அவரிடம் கொட்டினர். தங்களுக்குப் பாலுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்றும், ஆளும் பாஜக அரசு கூட்டுறவு சங்கங்களைக் கைப்பற்றி, தங்களின் குரலை நசுக்குவதாகவும் அவர்கள் கடுமையாகக் குற்றம் சாட்டினர்.
விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்த ராகுல் காந்தி, ‘சர்தார் படேல் உருவாக்கிய இந்த மாபெரும் அமுல் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை பாஜக கைப்பற்ற நினைக்கிறது. உங்களுக்கு நான் துணை நிற்பேன். பிரச்னைகளுக்காகப் போராடுவேன். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்’ என்று அவர் வாக்குறுதி அளித்தார். ராகுல் காந்தியின் இந்தச் சந்திப்பு, குஜராத் அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.