காந்திநகர்: மதங்கள், பழக்கவழக்கங்கள், பாரம்பரியம் அடிப்படையிலான தனிநபர் சட்டங்களை நீக்கிவிட்டு அனைவருக்கும் பொதுவான ஒரே மாதிரியான சட்டத்தை கொண்டு வருவது பொது சிவில் சட்டம் எனப்படுகின்றது. ஒன்றிய அரசின் பொது சிவில் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தாலும் பாஜ ஆளும் மாநிலங்கள் இந்த சட்டத்தை ஆதரித்து வருகின்றன. நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கடந்த வாரம் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து பாஜ ஆளும் குஜராத் மாநிலத்திலும் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக முதல்வர் புபேந்திர படேல் கூறுகையில், பொது சிவில் சட்டத்தின் தேவையை மதிப்பீடு செய்யவும், அதற்கான வரைவு மசோதாவை தயாரிப்பதற்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு 45 நாட்களில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். அதன் பிறகு பொது சிவில் சட்டத்தை செயல்படுத்துவது குறித்து மாநில அரசு முடிவெடுக்கும் என்றார்.
Advertisement


