டெல்லி: குஜராத், டெல்லியில் பரவலாக பெய்து வரும் பலத்த மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மின்னல் தாக்கியதில் பீகாரில் 8பேர் உயிரிழந்துள்ளனர். வட மாநிலங்களில் பருவமழை இன்னும் தொடங்கத நிலையிலும் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. ராஜஸ்தான், குஜராத், டெல்லி மற்றும் கேரளாவில் கனமழை கொட்டுகிறது. தொடர்மழையால் டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகள் சேதமடைந்துள்ளன. ராஜஸ்தானின் தோல்பூர் மற்றும் குஜராத்தில் பலத்த மழை வெளுத்து வாங்கியது.
இதனால் முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் ராஜஸ்தானில் இருவர் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இடி, மின்னல் தாக்கியத்தில் 6 மாவட்டங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் சேதமடைந்துள்ளன. கனமழை எச்சரிக்கையை அடுத்து கேரளாவில் பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், வயநாடு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.