Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எளிய பாஸ்வேர்டால் ஏற்பட்ட விபரீதம்; குஜராத் மருத்துவமனை சிசிடிவி காட்சிகள் ‘ஆபாச’ சந்தையில் விற்பனை: 50,000 வீடியோக்களை திருடிய கும்பலால் பரபரப்பு

அகமதாபாத்: மருத்துவமனையின் சிசிடிவி கேமராக்களுக்கு வைக்கப்பட்டிருந்த மிக எளிய பாஸ்வேர்டை பயன்படுத்தி, பெண் நோயாளிகளின் அந்தரங்க வீடியோக்களைத் திருடி ஆபாச சந்தையில் விற்ற கொடூர சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பாயல் மகப்பேறு மருத்துவமனையில், நோயாளிகளின் பாதுகாப்புக்காகப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா நெட்வொர்க்கிற்கு ‘admin123’ என்ற மிக எளிமையான பாஸ்வேர்டை பயன்படுத்தியுள்ளனர்.

இதை தெரிந்து கொண்ட ஹேக்கர்கள், ‘புரூட் ஃபோர்ஸ் அட்டாக்’ என்ற முறையில், எளிதில் யூகிக்கக்கூடிய பாஸ்வேர்ட்களை முயற்சிக்கும் தானியங்கி முறைகள் மூலம், மருத்துவமனையின் கேமராக்களின் நேரடி ஒளிபரப்பு மற்றும் பதிவுகளை சட்டவிரோதமாக தேடியுள்ளனர். கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் இந்த மருத்துவமனை மற்றும் நாடு முழுவதும் இதேபோல் பாதுகாப்பு குறைவாக இருந்த அமைப்புகளிடம் இருந்து 50,000 வீடியோ காட்சிகளை இந்தக் கும்பல் திருடியுள்ளது. திருடப்பட்ட இந்த வீடியோக்களில், பெண் நோயாளிகளின் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பான மிகவும் அந்தரங்கமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோக்களை முதலில் தனிப்பட்ட டெலிகிராம் சேனல்களில் பரப்பிய கும்பல், பின்னர் அவற்றை யூடியூப் போன்ற பொது தளங்களிலும் பதிவேற்றி விநியோகித்துள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர், ஹேக் செய்யப்பட்ட வீடியோக்களை கியூஆர் கோடுகளாக மாற்றி, சக குற்றவாளிகளுக்கு விற்று, அதன் மூலம் சட்டவிரோதமாகப் பணம் சம்பாதித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வீடியோக்களின் விளம்பரக் காட்சிகள் இணையத்தில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இந்த மோசடி அம்பலமானது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அகமதாபாத் சைபர் கிரைம் பிரிவு போலீசார், வீடியோக்களைப் பரப்பிய பலரைக் கைது செய்து, இந்த மோசடியின் பின்னணியில் உள்ள வலைப்பின்னல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.