Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மரு.ரா.வைத்தியநாதன்

சென்னை: சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபம் உள்ளிட்ட அனைத்து மணி மண்டபங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை இன்று (04.05.2024) செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மரு.ரா.வைத்தியநாதன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காந்தி மண்டப வளாகம் சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபம், திராவிடப் பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் மணி மண்டபம், இரட்டைமலை சீனிவாசன் மணி மண்டபம், பக்தவச்சலம் நினைவிடம், மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபம், தியாகிகள் மணிமண்டபம், வ.உ.சி. செக்கு, திறந்தவெளி அரங்கம், காந்தி அருங்காட்சியகம், இராஜாஜி நினைவகம் மற்றும் இராஜாஜி நினைவாலயம் ஆகிய மணி மண்டபங்களையும், பல்வேறு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் சிலைகளையும், நினைவுச் சின்னங்களையும் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அவ்வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை உயர் அலுவலர்கள் மற்றும் வெளி முகமை ஒப்பந்ததாரர்கள் ஆகியோருடன் நேரடியாக கலந்துரையாடி, பராமரிப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

காந்தி மண்டப வளாகத்தில் உள்ள காந்தி அருங்காட்சியகம், காமராஜர் நினைவகம் மற்றும் பக்தவச்சலம் நினைவகம் ஆகியவற்றில் சுமார் 1.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்த கட்டிடப் பணிகளையும் இயக்குநர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், வளாகத்தை மேலும் மேம்படுத்தும் பொருட்டு உடனடியாக திட்ட மதிப்பீடு வழங்குமாறு சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இவ்வாய்வின்போது, பொதுப்பணித்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தி கண்காணிப்பு பொறியாளர் எம்.ஸ்ரீதரன், செயற்பொறியாளர் இ.இம்மானுவேல் ஜெய்கர். உதவி செயற்பொறியாளர் திருமதி அருட்செல்வி உள்ளிட்ட அலுவலர்கள், செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் வெளிமுகமை ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.