Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜி.எஸ்.டி. விவகாரம்.. ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டக்கூடாது: கனிமொழி எம்.பி. காட்டம்!!

சென்னை: ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். கோவை கொடிசியாவில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில்;

"இனிப்புக்கு 5% ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12% இருக்கிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும். அதே போல, Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்ல. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18% ஜி.எ.ஸ்.டி. வாடிக்கையாளர் சொல்றாரு. க்ரீமை கொண்டு வா, நானே வச்சிக்கிறேன்னு சொல்றாரு. கடை நடத்த முடியல மேடம். ஒரே மாதிரி வையுங்கள். ஒரு குடும்பத்துக்கு பில் போடணும்னா கம்யூட்டரே திணறுது மேடம்.'' என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார். சீனிவாசன் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், ஜி.எஸ்.டி. குறித்து பேசிய அன்னபூர்ணா சீனிவாசன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளங்களில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதற்கு திமுக எம்.பி. கனிமொழி மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் செயல்பாட்டாளர் சுந்தரராஜன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்;

திமுக எம்.பி. கனிமொழி பதிவு:

‘பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து’

- குறள் 978, அதிகாரம் 98

ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன் பதிவு:

“இது தமிழ்நாட்டின் மாண்பை குறைக்கும் செயல்மட்டுமல்ல, தமிழ் தொழில்முனைவோரின் மாண்பை அழிக்கும் செயல்”.

கடவுளாக இருந்தால்கூட “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று வாதாடிய மண் இந்த மண்.

இந்த மண்ணின் உயிர்நாடியே “அதிகாரத்தை கேள்வி கேட்பதுதான்”.

இதுதான் தமிழ்நாட்டின் உயிர்துடிப்பு. கொங்கு பெருமை பேசுவோர் இப்படி மன்னிப்பு கேட்கவைக்கப்பட்டதற்கு என்ன எதிர்வினை?

நீங்கள் மன்னிப்பு கேட்டு இருக்கக்கூடாது “அன்னப்பூர்னா சீனிவாசன்”.

நீங்கள் சொல்லிய அல்லது கேட்ட எதுவும் தவறு கிடையாது.

மன்னிப்பு கேட்டதுதான் தவறு. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.