Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நள்ளிரவுடன் முடிந்தது: லட்சக்கணக்கானோர் போட்டி போட்டு விண்ணப்பம்: ஜூலை 12ல் எழுத்துத்தேர்வு நடக்கிறது

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 25ம் தேதி வெளியிட்டது. அதில் கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 215 காலி பணியிடங்கள், இளநிலை உதவியாளர்(பிணையமற்றது) 1,621, இளநிலை வருவாய் ஆய்வாளர் 239, தட்டச்சர் 1,099, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) 368, உதவியாளர் 54, கள உதவியாளர் 19, வனக் காப்பாளர் 62, ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் 35, வனக் காவலர் 71 உள்ளிட்ட 25 வகையான பணிகளில் 3935 காலிப்பணியிடங்கள் இடம் பெற்றுள்ளன. இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான அன்றே(ஏப்ரல் 25ம் தேதி) டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். இதனால், போட்டி போட்டு கொண்டு தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர். தேர்வுக்கு விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி வழங்கிய ஒரு மாதம் கால அவகாசம் நேற்று நள்ளிரவு 11.59 மணியுடன் முடிந்தது. இதனால், நேற்று நிறைய பேர் போட்டி விண்ணப்பித்தனர். இது வரை லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கும் போது இரு மாவட்டங்களை தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட இரு மாவட்டங்களில் ஏதேனும் ஒன்றில் உள்ள பல தேர்வு மையங்களில் ஒன்றில் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை மே 29ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மே 31ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தங்களை செய்து கொள்ளலாம். தொடர்ந்து ஜூலை 12ம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தரத்தில் கேள்விகள் கேட்கப்படும். பகுதி ``அ”வில் தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு 100 வினாக்களும், பகுதி ``ஆ” வில் பொது அறிவில் 75 வினாக்களும், திறனறிவு மனக்கணக்கில் 25 வினாக்கள் என 100 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

பகுதி அவில் குறைந்தபட்சம் 40 சதவீதம்(60 மதிப்பெண்கள்) பெற வேண்டும். இந்த மதிப்பெண் பெற்றால் மட்டுமே விடைத்தாளின் பகுதி ``ஆ” மதிப்பீடு செய்யப்படும். இந்த தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக 90 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பகுதி அ, ஆ ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் தரவரிசைக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படும். சரியான பதிலை தேர்வு செய்யும் வகையில் இந்த தேர்வானது நடைபெறும். தேர்வறைகளுக்குள் செல்போன்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. இதேபோல் கருப்பு நிற பால்பாயிண்ட் பேனாக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கடந்த 2024ம் ஆண்டு குரூப் 4 பதவியில் 9491 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வை 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 பேர் விண்ணப்பித்தனர்.

அதே போல இந்தாண்டு நிரப்பப்பட உள்ள தேர்வுக்கும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பிப்பித்துள்ளனர். எவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற விபரத்தை டிஎன்பிஎஸ்சி வரும் நாட்களில் வெளியிடும் என்று தெரிகிறது. மேலும் 2025ம் ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அரசு துறை நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.