Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூலுக்கு முக்கிய தொழில்நுட்பம்

*புதுகை வேளாண். இணை இயக்குனர் ஆலோசனை

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலைப் பயிரில் ஊட்டச்சத்துக் கரைசல் தெளித்தல் மற்றும் ஜிப்சம் இடுதல் ஆகிய இரு முக்கியத் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து அதிக மகசூல் பெறலாம் எனப் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்(பொ) ரவிச்சந்திரன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது சாகுபடி செய்துள்ள நிலக்கடலைப் பயிரில் அதிக மகசூல் பெற்றிட, பூக்கும் தருணத்தில் பூக்கள் உதிர்வதைத் தடுத்து, பூக்கள் மிகுதியாகப் பூக்கச் செய்து, அறுவடையின்போது திரட்சியான நிலக்கடலைகளைப் பெற்று கூடுதல் மகசூல் பெறுவதற்கு இலைவழியே ஊட்டச்சத்துக் கரைசல் தெளிப்பது ஒரு முக்கிய தொழில் நுட்பமாகும்.

ஊட்டச்சத்துக் கரைசல் தயார் செய்தல்:

ஒரு ஏக்கர் பரப்பு நிலக்கடலைக்குத் தேவையான ஒரு கிலோ கிராம் டி.ஏ.பி, 400 கிராம் அம்மோனியம் சல்பேட், 200 கிராம் போராக்ஸ் ஆகியவற்றை, தெளிப்பதற்கு முதல் நாள் இரவே 15 லிட்டர் நீரில் ஊறவைத்து, மறுநாள் காலை அக்கரைசலை வடிகட்டிக் கிடைக்கும் தெளிந்த கரைசலுடன் தேவையான நீர் சேர்த்து 200 லிட்டர் கரைசலாகத் தயார் செய்திடல் வேண்டும்.

இந்தக் கரைசலை விதைத்த 25ம் நாள் ஒருமுறையும் 35ம் நாள் மறுமுறையும் ஆக இருமுறை தெளிக்க வேண்டும். இக்கரைசலுடன் பிளானோபிக்ஸ் எனும் பயிர் வளர்ச்சி ஊக்கியை 140 மி.லி. கலந்து தெளிக்கவும். ஊட்டச்சத்துக் கரைசல் தெளிக்கும்பொழுது பரிந்துரைக்கப்பட்ட உரங்களின் அளவு சரியாகவும் வயலில் ஈரப்பதம் இருக்குமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஜிப்சம் இடுதல் :

​நிலக்கடலைப் பயிரில், விதைத்த 45ம் நாளில் இரண்டாம் களையெடுத்து மண் அணைக்க வேண்டும். இதனால் நிலக்கடலைப் பயிரின் விழுதுகள் மண்ணில் எளிதாக இறங்கும். மேலும் திரட்சியான எண்ணெய்ச் சத்து மிக்க காய்கள் பெறுவதற்குச் சுண்ணாம்புச்சத்து மற்றும் கந்தகச்சத்து ஆகியன தேவைப்படுகின்றன.

எனவே 45ம் நாள் நிலக்கடலைக்கு மண்அணைப்பதற்கு முன் ஏக்கருக்கு 80 கிலோ கிராம் ஜிப்சம் இட்டு, களைகள் நீக்கி, செடிகளைச் சுற்றி நன்கு மண் அணைத்துவிட வேண்டும். இதனால் நிலக்கடலைப் பயிரின் விழுதுகள் நன்கு மண்ணுக்குள் இறங்கி அறுவடையின்போது திரட்சியான மற்றும் எண்ணெய்ச்சத்து மிகுந்த நிலக்கடலை கிடைக்கும். இதனால் விவசாயிகளுக்கு அதிக மகசூலும் லாபமும் கிடைக்கிறது.

எனவே விவசாயிகள் நிலக்கடலைப் பயிரில் ஊட்டச்சத்துக் கரைசலைத் தெளித்தும், ஜிப்சம் இட்டு மண் அணைத்தும் மகசூலை அதிகரித்து லாபம் அடைந்திடுமாறும், மேலும் கூடுதல் விவரங்களுக்குத் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகிப் பயன் பெறுமாறும் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்(பொ) ரவிச்சந்திரன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.​​